ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேட்டாலே நெஞ்சு வலிக்குதே! அடுத்த தீபாவளிக்கு தங்கம் விலை எப்படி இருக்கும்?
சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.90 வரை அதிகரித்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஓராண்டிற்குள் தங்கம் விலை எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் முதல் சேமிப்பாக எப்போதும் தங்கமே இருந்து வருகிறது. இந்த தங்கம் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.

தங்கம் விலை: கடந்தாண்டு இதே தீபாவளி காலகட்டத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 5,695 என்ற ரேஞ்சில் இருந்தது. ஆனால், ஓராண்டில் அது உச்சம் தொட்டு ரூ. 7,375ஆக உள்ளது. இடையில் மத்திய அரசும் கூட தனது இறக்குமதி வரியைக் குறைத்து இருந்தது. ஒருவேளை இறக்குமதி வரி குறைக்கப்படாமல் இருந்தால் தங்கம் விலை இன்னுமே கூட உச்சம் தொட்டு இருக்கும்.
தங்கம் விலை இந்தளவுக்கு உயரும் நிலையில், மக்கள் முடிந்தவரை அதில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேநேரம் சிலர் அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையும் என்றும் நம்புகிறார்கள். ஆனால், அடுத்தாண்டு தங்கம் விலை எப்படி இருக்கும். குறைந்தால் எவ்வளவு குறையும்.. அதற்கு வாய்ப்பு இருக்கா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
கடந்த ஓராண்டில்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "தங்கம் விலை ஏற்கனவே ராக்கெட்டில் ஏறிவிட்டது. நேற்று மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 60 அதிகரித்து ரூ.7325ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ரூ.8045ஆக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நீங்கள் தங்கம் வாங்கி இருந்தால்.. நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.
கடந்த ஓராண்டில் நாம் பார்த்தோம் என்றால் சென்செக்ஸ், நிஃப்டியை எல்லாம் அடித்துத் தூக்கி எறிந்துவிட்டு தங்கம் தான் மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. சுமார் 30% லாபத்தைக் கொடுத்து டாப் இடத்தில் இருக்கிறது. இந்தாண்டு மட்டும் தங்கம் 6% வரை அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமா எனக் கேட்டால்.. நிச்சயம் அதிகரிக்கும். ஆனால், எவ்வளவு தூரம் அதிகரிக்கும் எனக் கேட்டால் அதை என்னால் தெளிவாகச் சொல்ல முடியாது.
எவ்வளவு உயரும்: ஆனால் ஒன்று, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.8500 போக வாய்ப்பு இருக்கு.. இப்போதே 24 கேரட் தங்கம் ஜிஎஸ்டி உடன் சேர்த்துப் பார்த்தால் ரூ.8300ஆக இருக்கிறது. இன்னும் ஒரு ரூ.700 வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன்படி பார்த்தால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8500 வரையிலும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9000 வரையிலும் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அம்மாடி: அதாவது 24 கேரட் தங்கம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு நிச்சயம் ஒரு முறையாவது ரூ.9000ஐ தொட்டுவிடும் என்றே நான் நினைக்கிறேன். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இஸ்ரேல்- ஈரான் போர், ரஷ்யா உக்ரைன் போர், சீனாவில் உள்ள பிரச்சினை, அமெரிக்க வட்டி விகிதம் ஆகியவை காரணமாக இருக்கும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications