அரசு ஒப்பந்தங்களில் 1% கமிஷன் லஞ்சம்- பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்- அதிரடி கைது!
சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசு ஒப்பந்தங்களில் 1% கமிஷன் லஞ்சம் கேட்டதாக ஊழல் புகாருக்குள்ளான பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்சிங்லா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விஜய்சிங்லா கைதும் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. டெல்லியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய 2-வது மாநிலம் பஞ்சாப். இம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார். அப்போதே ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார் முதல்வர் பகவந்த் மான்.

இந்த நிலையில் பகவந்த் மான் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜய்சிங்லா மீது ஊழல் புகார்கள் ரெக்கை கட்டி பறந்தன. குறிப்பாக அரசு ஒப்பந்தங்களில் 1% கமிஷன் லஞ்சம் கேட்கிறார் விஜய்சிங்லா என்கிற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்வர் பகவந்த் மானும் விசாரணை நடத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய்சிங்லாவை இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கினார் முதல்வர் பகவந்த் மான். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜய்சிங்லா அடுத்த சில மணிநேரங்களிலேயே அதிரடியாக கைதும் செய்யப்பட்டார். இது தொடர்பாக கூறிய முதல்வர் பகவந்த் மான், ஊழல், லஞ்சப் புகார்களை எங்களால் சகித்து கொள்ள முடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.