பஞ்சாப்பில் இன்டர்நெட், எஸ்எம்எஸ் சேவை முடக்கம்.. வன்முறையால் போலீஸ் அதிகாரிகள் தூக்கியடிப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த வன்முறையால் இன்டர்நெட், எஸ்எம்எஸ் சேவைகள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. பகவந்த் மான் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நியைலில் பஞ்சாப் பாட்டியாலா டவுனில் சிவசேனாவை(பால்தாக்கரே) சேர்ந்தவர்கள் ஊர்வலம் செல்ல முடிவு செய்திருந்தனர்.
அதாவது பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் சிவசேனா அமைப்பினர் ஊர்வலம் புறப்பட்டனர். ஆர்ய சமாஜ் சவுக்கில் இருந்து காளி கோவில் நோக்கி ஊர்வலம் சென்றது.

வன்முறை- துப்பாக்கிச்சூடு
இந்த ஊர்வலத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. காளி கோவில் அருகே சென்ற நிலையில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். வாள் மூலம் சண்டையிட்டனர். இதனால் வன்முறை வெடித்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையாளர்களை விரட்டினர். இந்த மோதலில் சிலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு - கைது
தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் முதல்வர் பகவந்த் மான், டிஜிபி பாவ்ராவுடன் ஆலோசனை நடத்தினர். இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை தொடர்பாக சிவசேனா அமைப்பினர் தலைவர் ஹரீஷ் சிங்லா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது.

இன்டர்நெட் சேவை முடக்கம்
இருப்பினும் வன்முறை தொடர்பாக சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் பரப்பப்படலாம் என்ற நிலை இருந்தது.இது இன்னும் பிரச்சனையை பெரிதாக்க வாய்ப்புள்ளதாக மாற்றும். இதனால் இன்டர்நெட், எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டது. இந்த சேவை முடக்கம் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை அமலில் உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் செல்போனில் பேசி கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி பஞ்சாப் அரசு பிறப்பித்த உத்தரவில் "கசெல்போன் இணைய சேவைகள் (2G/3G/4G/CDMA), எஸ்எம்எஸ் சேவைகள் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பாட்டியாலா மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மாற்றம்
மேலும் இந்த வன்முறை தொடர்பாக 3 போலீஸ் அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். பாட்டியாலா ரேஞ்ச் ஐஜி, பாட்டியாலா மூத்த சூப்பிரண்டு, மற்றும் சூப்பிரண்டு ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய ஐஜியாகா முக்விந்தர் சிங்கும், தீபக் பாரிக் மூத்த சூப்பிரண்டாகவும், வாஜிர் சிங் சூப்பிரண்டாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் அலுவலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications