பெண்களுக்கு 1000 ரூபாய் திமுக தந்துட்டா? பொன்னேரி அரசு ஹாஸ்டல் மேட்டரையும் கையில் எடுத்த தமிழக பாஜக
சென்னை: பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததோடு அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தான் திராவிட மாடலா? என்று பொன்னேரி விடுதி விவகாரத்தில் தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதியில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த விடுதியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாகவும், மிகத் தரம் குறைந்த உணவு வழங்கப்படுவதாகவும் கூறி மாணவிகள் திடீரென விடுதி வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அரசு ஹாஸ்டல்
தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதாக மாணவிகள் வேதனையும் தெரிவித்தனர். மேலும், இது குறித்து புகார் அளிக்கும் மாணவிகளின் நடத்தையை கொச்சைப்படுத்தும் விதமாக வார்டன் பேசுவதாகவும், விடுதியை விட்டு வெளியேற சொல்லி மிரட்டுவதாகவும் அவர்கள் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்..
தகவலறிந்து வந்த பொன்னேரி போலீசார், உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
வார்டன் மீது மாணவிகள் புகார்
இதனிடையே, வார்டனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய 4 மாணவிகளை மட்டும் குறிவைத்து விடுதியைக் காலி செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகவும், அவர்களின் நடத்தையை தவறாக சித்தரித்து அவமானப்படுத்துவதாகவும் மாணவிகள் செய்தியாளர்களிடம் வேதனையோடு கூறி உள்ளனர்.. இத்தகைய மன உளைச்சலால் தங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பாஜக காட்டம்
பொன்னேரி ஹாஸ்டல் உணவு விவகாரம் வெடித்து கிளம்பி உள்ள நிலையில், தமிழக பாஜக இதற்கு குரல் கொடுத்துள்ளது.. இதுகுறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி காட்டமான வெளியிட்டுள்ளார்..
அந்த அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சமூக நீதிக் கல்லூரி மாணவியர் விடுதியில் தரமற்ற, புழுக்கள் நிறைந்த உணவு வழங்கப்பட்டதாக அவ்விடுதி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, பெண்கள் மற்றும் மாணவிகளின் நலனை அரசு எவ்வாறெல்லாம் புறக்கணித்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.
இந்த உணவால் உடல்நலம் பாதிப்படைவதாகக் கூறி, தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தியும் தொடர்புடைய விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை இல்லை என்பது கடும் கண்டனத்துக்குரியது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
விடுதி நிர்வாகத்தினர், கேள்வி எழுப்பும் மாணவிகள் குறித்து தவறாக பேசுவதும், அவர்களின் பெற்றோரிடம் மாணவிகள் குறித்து அவதூறு பேசுவதும் தொடர்கிறது என்று மாணவிகள் தெரிவிக்கின்றனர். முதல்வர் தனிப்பிரிவுக்கு இது குறித்து புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பெண்கள் மீதான திமுகவின் அலட்சியப் போக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.
பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததோடு அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தான் திராவிட மாடலா?" என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications