சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தமிழ்நாடு பாஜக முன்வைக்கும் 13ஆவது சட்டத் திருத்தம் தீர்வாகுமா என்ன?

இலங்கையின் 13-வது அரசியல் சாசன திருத்தத்தின் பின்னணி, அதன் விவரங்களை விவரிக்கிறது இந்த செய்தி.

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் 13-வது சட்ட திருத்தம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வாகாது; அது அதிகாரமற்றது என்கிறார் மூத்த தமிழ் தேசியத் தலைவர் பழ.நெடுமாறன்.

13th Amendment of Sri Lankan Constitution to give Powers to Eelam Tamils?

டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது பிரிவை செயல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அண்ணாமலை சந்தித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேநேரத்தில் இலங்கை தமிழர் பிரச்சனையில் உச்சரிக்கப்படுகிற 13-வது அரசியல் சட்ட திருத்தம் என்பது என்ன? அதன் சாராம்சங்கள் என்ன? இலங்கை தமிழருக்கு அதிகாரப் பரவலை இந்த 13-வது சரத்து வழங்குமா? என்பது தொடர்பாக அண்மையில் தமிழ்த் தேசிய இயக்கங்களின் மூத்த தலைவர் பழ.நெடுமாறன் ஒரு விரிவான கட்டுரையை எழுதி இருந்தார்.

பழ. நெடுமாறன் எழுதிய கட்டுரை விவரம்: 1987ஆம் ஆண்டு சூலை 29ஆம் நாள் இந்திய - இலங்கை உடன்பாட்டில் அன்றைய இந்திய தலைமையமைச்சர் இராசீவ் காந்தியும், இலங்கை குடியரசுத் தலைவர் செயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். உடன்பாடு கையெழுத்திட்டப் பிறகு சுமார் 3 மாதம் கழித்து இலங்கை அரசியல் யாப்பிற்கான 13ஆம் ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பில் 17ஆம் அத்தியாயத்தின் 'அ' பிரிவாகவும், உறுப்பு 154 'அ' பிரிவாகவும் இத்திருத்தம் சேர்க்கப்பட்டது. மாகாண சபை சட்டமும் இதே நாளில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய - இலங்கை உடன்பாட்டில் கூறப்பட்ட முதன்மை வாய்ந்த அம்சங்களான தமிழர் தாயகப் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துதல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், தமிழர் பகுதியில் உள்ள சிங்கள காவலர்களையும், படை வீரர்களையும் திரும்பப் பெறுதல் போன்ற பலவற்றை சிங்கள அரசு நிறைவேற்றாத காரணத்தினால் மாகாண சபை தேர்தலை ஈழத்தமிழர்கள் புறக்கணித்தனர். ஆனால் இந்தியப் படைவீரர்களின் உதவியுடன் மோசடியான தேர்தல் நடத்தப்பட்டு வரதராசபெருமாள் என்பவர் தலைமையில் அதிகாரமில்லாத அமைச்சரவை பதவியேற்றது.

13th Amendment of Sri Lankan Constitution to give Powers to Eelam Tamils?

அடிப்படைத் தவறுகள்

ஈழத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மாகாண சபைச் சட்டம் அடிப்படையிலேயே பல தவறுகளைக் கொண்டிருந்தது.

1.யாருடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மாகாண சபை சட்டம் கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பிரச்சனைக்குரிய ஈழத் தமிழர் தரப்புடன் கலந்தாலோசனை செய்யாமலும், அவர்களின் பங்களிப்பு இல்லாமலும் ஒப்புதலைப் பெறாமலும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

2. இலங்கைக் கூட்டாட்சி நாடல்ல; ஒற்றையாட்சி நாடாகும். இலங்கை அரசியல் யாப்பின்படி "இலங்கை குடியரசு ஒற்றையாட்சி அரசாகும் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் 2/3 பங்கு பெரும்பான்மையோடு அரசியல் யாப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதுடன், மக்களின் பொதுவாக்கெடுப்பு மூலமும் அவர்களின் ஒப்புதல் பெறவேண்டியது இன்றியமையாததாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மக்கள் தொகையில் 75 சதவீதம் சிங்களரே. 25 சதவீதம் தமிழர்கள். இந்நிலையில் நாடாளுமன்றத்திலும், நாட்டிலும் சிங்களரே பெரும்பான்மையினராக இருக்கும் நிலையில், இலங்கையைக் கூட்டாட்சி நாடாக மாற்றவேண்டும் என்ற சட்டத் திருத்தம் ஒருபோதும் நிறைவேற்றப்பட முடியாததாகும். பொதுமக்களின் வாக்கெடுப்பின் மூலமும் ஒப்புதல் பெற முடியாது.

3. ஆனால், அரசியல் சட்டத்தின் 76ஆவது உறுப்பின் கீழ் கொண்டுவரப்படும் சட்டத் திருத்தத்திற்கு 2/3 பங்கு பெரும்பான்மை இருந்தால் போதும். இத்திருத்தம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த தேவையல்ல. அன்றைய செயவர்த்தனா ஆட்சிக்கு 2/3 பங்கு பெரும்பான்மை இருந்தது. எனவே, 76ஆவது உறுப்பின்கீழ் அரசியல் சட்டத் திருத்தத்தை அவர் சுலபமாக நிறைவேற்றியிருக்கலாம். ஒற்றையாட்சி அரசான இங்கிலாந்து அரசு முறையில் வட அயர்லாந்து, சுகாட்லாந்து போன்ற பகுதிகளுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பங்கீடு அளிக்கப்பட்டதைப் போல, வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு 76ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் ஓரளவு அதிகாரத்தை வழங்கியிருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகளைச் செய்வதற்கு சிங்கள அரசு விரும்பவில்லை. அவ்வாறு செய்யும்படி அதை வற்புறுத்த இந்திய அரசும் தவறிவிட்டது.

4. 13ஆவது சட்டத் திருத்தம் தொடர்பாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது பெரும்பான்மை நீதிபதிகள் அரசியல் யாப்பு 76ஆவது உறுப்பின்படி நாடாளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்களை இத்திருத்தம் கேள்விக்குட்படுத்தவில்லை எனத் தீர்ப்பளித்தனர். அதாவது, நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டே மாகாண சபை இயங்கவேண்டும் என்பதே இத்தீர்ப்பாகும்.

5. இலங்கையில் சிங்களர் - தமிழர் என இரு இனங்கள் வாழ்கின்றன. எனவே மாகாணங்கள் அமைக்கும் போது இனரீதியான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், சிங்களருக்கு ஒரு மாகாணமும், தமிழருக்கு மற்றொரு மாகாணமும் ஆக இரு மாகாணங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். ஏற்கெனவே மத்திய ஆட்சி சிங்கள ஆட்சியாகவே உள்ளது. ஆனால், செயவர்த்தனா மிக தந்திரமாக பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்களருக்கு எட்டு மாகாணங்களையும், தமிழருக்கு ஒரு மாகாணத்தையும் அளிக்கும் வகையில் ஒன்பது மாகாணங்களை உருவாக்கினார். ஆனால், வடக்கு - கிழக்குப் பகுதிகளை இணைத்து ஒரு மாகாணமாக ஆக்குவது குறித்து 13ஆவது சட்டத்திருத்தத்தில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இணைப்புக் குறித்து நாடாளுமன்றம் ஒரு சட்டம் மூலம் நிறைவேற்றலாம் என்று கூறப்பட்டிருந்தது அல்லது குடியரசுத் தலைவர் ஒரு பிரகடனத்தின் மூலம் இணைப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது. தற்காலிக இணைப்பிற்குக் கூட அரசியல் யாப்புத் தகுதி வழங்கப்படவில்லை. எனவே, பிற்காலத்தில் உச்சநீதிமன்றம் மூலம் இந்த இணைப்பு செல்லாததாக்கப்பட்டு வடக்கு - கிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட போது இந்தியாவில் காங்கிரசு கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆனாலும்கூட இந்திய - இலங்கை உடன்பாட்டிற்கு சிறு எதிர்ப்பைக்கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.

6. இலங்கை மத்திய அரசுக்குரிய அதிகாரங்களும், மாகாண அரசுக்குரிய அதிகாரங்களும் திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை. இதன் விளைவாக மாகாண அரசுகள் மத்திய அரசின் ஆணைகளுக்கிணங்கவே செயல்படவேண்டி வந்தது. அப்பட்டமாகக் கூறினால் மாகாண அரசுகள் பொம்மை அரசுகளாகவே விளங்கின.

7. மாகாண அரசிடம் இருந்த அதிகாரங்கள்கூட ஆளுநருக்குக் கட்டுப்பட்டவையாக இருந்தன. அவரை மீறி மாகாண முதலமைச்சரோ, அமைச்சர்களோ செயல்பட முடியவில்லை.
வடக்கு - கிழக்கு பிரிவும், புலிகளின் பின்னடைவும் சிங்கள அரசுக்கு மேலும் ஊக்கம் அளித்தன. முன்பு செய்யப்பட்டதைவிட, விரைவாகவும், அதிகமாகவும் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட எல்லைகளை திருத்தியமைத்தல், முதலீட்டு முயற்சிகளுக்காகவும், இராணுவ முகாம்களுக்காகவும் நிலங்களை ஒதுக்குதல், சிங்கள மீனவர்களுக்கு வாடிகளை அமைத்தல், சிங்கள வணிகர்களின் கடைகளைத் திறத்தல் போன்றவை இராணுவ உதவியுடன் நிறைவேற்றப்படுகின்றன.

8. மாகாண சபைக்கு தன்னிச்சையாக சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படவில்லை. சட்ட முன் வடிவுகளை ஆளுநருக்கு அனுப்பி அவரின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிலையில் அத்தகைய அனுமதி எளிதில் கிடைக்கவில்லை. அனுமதி பெற்று சட்டங்களை நிறைவேற்றினாலும், ஆளுநரின் ஒப்புதலை பெறுவதிலும் பெரும் இடர்ப்பாடு உருவானது. ஆளுநர் ஒப்புதல் கொடுத்தாலும் அச்சட்டங்களை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்குக் குடியரசுத் தலைவர் அனுப்பலாம்.

9. மாகாண முதலமைச்சரின் ஆலோசனைப்படி காவல்துறைத் தலைவரை ஆளுநர் நியமிக்கவேண்டும். ஆனால், இதில் முரண்பாடு தோன்றுமானால், குடியரசுத் தலைவரே அந்த நியமனத்தை மேற்கொள்வார். இதன்மூலம் காவல்துறையின் அதிகாரம் முதலமைச்சரிடமிருந்து பறிக்கப்பட்டது.

10. குறிக்கப்பட்ட கல்வி நிலையங்களைத் தவிர, ஏனைய கல்வி நிலையங்கள் அனைத்தும் மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், குறிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் சிறிது சிறிதாக தேசிய கல்வி நிலையங்களாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. மற்றும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இவற்றில் மாகாண அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

11. நிலம் தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும் என அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், நிலங்களைப் பயன்படுத்தும் உரிமை மாகாண அரசிடம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்பவே மாகாண அரசு நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசுக்குத் தேவையானால் நிலங்களை எடுத்துக்கொள்ளும் அதிகாரம் உண்டு.
நிலத்தின்மீது அதிகாரம் இல்லாமல் ஒரு தேசிய இனம் தனது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகளின் விளைவாக தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றங்களைத் தடுக்க மாகாண அரசினால் இயலாமல் போய்விட்டது.

12. நீதித்துறை அதிகாரப் பகிர்வுக்கு உட்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் நீதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழேயே மாகாண நீதித்துறை நீடிக்கிறது. மாகாண அரசுக்கும், மாகாண மேல் நீதிமன்றத்திற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.

13. இலங்கையின் இணை ஆட்சிமொழியாக தமிழ் விளங்கும் என அறிவிக்கப்பட்டாலும், இன்றுவரையிலும் அது நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை.
மேற்கண்ட யதார்த்த உண்மைகளை சிறிதளவுகூட உணராமல் இந்திய அரசு 13ஆவது சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என சிங்கள அரசிடம் வற்புறுத்தி வருகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டையொட்டி மேற்கு நாடுகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இலங்கை இனப் பிரச்சனைக் குறித்தோ. 13ஆவது சட்டத் திருத்தம் குறித்தோ சிறிதளவுகூட புரிந்துகொள்ளாமல் இந்நாடுகள் செயல்படுவது என்பது போகாத ஊருக்குப் புரியாத வழியைக் காட்டுவதாகும்.

13ஆவது திருத்தம் குறித்து சிங்கள ஆய்வாளர்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இலங்கை இனப் பிரச்சனையின் தீர்வுக்கு 13ஆவது திருத்தம் எந்த வகையிலும் உதவாது, சற்றும் பொருத்தமற்றது என அக்கட்டுரைகளில் வலியுறுத்தியுள்ளனர்.

13ஆவது திருத்தம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டது. இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகார அலகோ, பகிர்வு அதிகாரங்களோ, கூட்டு அதிகாரங்களோ, அதிகாரங்களுக்கான பாதுகாப்போ எதுவும் இல்லாததாகும். இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஈழத் தமிழர்களைக் கலந்து ஆலோசித்து இத்திருத்தத்தை முன்மொழிந்திருந்தால் மேலே கூறப்பட்ட குறைபாடுகளை அகற்றியிருக்க முடியும்.

English summary
Here is an analysis on 13th Amendment of Sri Lankan Constitution and Powers to Eelam Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X