அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டை..சத்தான பிஸ்கட்..முதல்வர் ஸ்டாலின் அதிரடி
சென்னை: அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த மாதம் முதல் வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதே போல அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவில் முட்டை, பயிறு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் சத்து மாவு, முட்டை, சத்து மாவு உருண்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அங்கன்வாடி மையங்களில் 1-2 வயது குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2-5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

மகிழ்ச்சி
அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத்துறை வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார குறியீடுகளை கொண்டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கை தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாக கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய எண்ணம். என்னை பொறுத்தவரையில் இந்த நோக்கத்தில் இம்மியளவும் மாறாமல் மேல் நோக்கிய பாய்ச்சலில் அரசின் எண்ணமானது நிறைவேறி வருகிறது.

கிராமப்புற வளர்ச்சி
இதில் மிக முக்கியமானது கிராமப்புற வளர்ச்சி. கிராமப்புற பிரச்னைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும் என்றும், அதற்கு மேக்ரோ அளவிலான நன்மைகளை செய்து தர வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

தேசிய நல்வாழ்வுக் குழுமம்
பொதுமக்கள் அனைவருக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தினுடைய நோக்கம். தமிழகத்தை பொறுத்தவரைக்கும், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48, மனம் - மனநலத்தை மேம்படுத்துதல், காசநோய் இறப்பில்லா திட்டம், நடமாடும் மருத்துவ குழு, நடமாடும் மருத்துவமனை, இளம் சிறார் நல்வாழ்வைத் தேடி பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர கால மேலாண்மை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை மற்றும் அவசர கால மேலாண்மை பிரிவு திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்
மாநிலத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 27 லட்சத்து, 774 குழந்தைகள், 7 லட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இச்சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது. ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் மூன்று முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

சத்து பிஸ்கெட்
இக்குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்கவும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 'ஊட்டச்சத்தை உறுதி செய்' எனும் திட்டம் கடந்த 21.5.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டு, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மருத்துவ குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவருக்குமான பொது விநியோக திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், 'பட்டினியின்மை' எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு, ஒரு தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களுடன் கூடிய மாநில உணவு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணையாளர்கள் வரவேற்பு
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அங்கன்வாடிகளில் வழங்கப்படும் முட்டைகளை கோழிப் பண்ணையாளர்கள் இடம் இருந்து தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது. முதல்வரின் இந்த அறிவிப்பு மூலம் நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இருந்து கூடுதலாக 40 லட்சம் முட்டைகள் கொள்முதல் ஆகும் என்பதால் கோழிப் பண்ணையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications