கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழை - 4 ரயில்கள் ரத்து
குமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக நாகர்கோவில் கன்னியாகுமரி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் தெங்கன் குழி இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 ரயில்கள் பகுதி வாரியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் திருநெல்வேலி, நாகர்கோவில் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுபெறக்கூடும் எனவும் இதனால் சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் ,திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கன மழை முதல் மிக கனழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டது. இன்று மழையின் அளவு சற்று அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த 10ம் தேதி ஷாலிமரில் இருந்து நாகர்கோவில் புறப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் பாறசாலையுடன் நிறுத்தப்படும். இந்த ரயில் பாறசாலை - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மங்களூரில் இருந்து புறப்பட்ட மங்களூர் - நாகர்கோவில் ரயில் இரணியலில் நிறுத்தப்படும் இந்த ரயில் இரணியல் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மங்களூர் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து நீடித்து வரும் கனமழையால் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் இருந்து வெளியேறிய மழை நீரானது பிரதான சாலையான ஒழுகிணசேரி சாலையை ஆக்கிரமித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது ஒழுகினசேரி சாலை. இந்த சாலை வழியாக மட்டுமே மாநிலத்திற்கு அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து நடைபெறும் என்ற நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அஞ்சு கிராமம் வழியாக இயக்கப்பட்டன. இதேபோல் சாலையில் புகுந்துள்ள மழை வெள்ளத்தில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன.












Click it and Unblock the Notifications