4-வது நாள்... கோவையில், குடோனுக்குள் வனத் துறையினருக்கு தண்ணி காட்டும் சிறுத்தை.. முடியல!
கோயமுத்தூர்: குனியமுத்தூர் அருகே குடோனில் சிக்கிய சிறுத்தையைப் பிடிக்க நான்காவது நாளாக வனத்துறையினர் இன்றும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அருகே குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் கழிவறை பொருட்கள் வைத்திருக்கும் குடோனில் சிக்கிய சிறுத்தையை பிடிக்க 4 வது நாளாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் இன்றும் வெளியிட்டுள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் அருகிலுள்ள வனப்பகுதியான சுகுணாபுரம்,கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. சிறுத்தை நடமாட்டம் அதிகம் இருப்பதாக வனத்துறைக்கு புகார் வந்தது.
குனியமுத்தூர் அருகிலிருக்கும் பி.கே.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கழிவறை உபகரணங்கள் இருக்கும் குடோன் உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அங்கு வேலைக்கு சென்ற ஊழியர்கள் குடோனுக்குள் சிறுத்தை இருப்பதைப் பார்த்து, குடோன் கதவுகளை மூடினர். இதையடுத்து குடோன் உரிமையாளர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தார். கோயமுத்தூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிறுத்தையைப் பிடிக்க தீவிரம் காட்டினார். அவர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் குடோனை சுற்றி வளைத்தனர்.
குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐந்து காமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்தால், சிறுத்தை உயிருக்கு ஆபத்து என்றும், அதுவாகவே கூண்டுக்குள் வரும் வரை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுக்குள் செல்லவில்லை. நான்காவது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் நேற்றை தொடர்ந்து இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
அதில் அதிகாலை அளவில் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமிராவை உற்றுபார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்பி செல்வதும் பதிவாகி உள்ளது. கடந்த மூன்று தினங்கள் இரவு பகலாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தும் சிறுத்தை கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது. கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை, புத்திசாலிதனமாக அப்படியே திரும்பி செல்வதும், குடோனைவிட்டு வெளியேற இடம் தேடுவதுமாக உலா வருகிறது.
இந்த சிறுத்தை, வனத்திலிருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தையால் விரட்டபட்டிருக்கலாம் என கூறும் வனத்துறையினர் ஏற்கனவே கூண்டில் பிடிப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்ட சிறுத்தையாக இருக்க கூடும் எனவும் சந்தேக்கின்றனர்.மேலும் மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டும் வனத்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக காத்திருந்து அதனை கூண்டிலேயே பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.