5 தொகுதி இடைத்தேர்தல்.. டிசம்பர் 20 கெடு.. விஜய் அரசுக்கு காத்திருக்கும் சவால் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் 20-ம் தேதிக்குள் வாக்குப்பதிவை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்..!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி முதன்முறையாக அமைத்தது.

Tamil Nadu By-Elections Tamil Nadu Politics TVK DMK AIADMK 5

5 தொகுதிகள் காலியானது ஏன்?

முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் பெரம்பூர் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது.

இதற்கிடையே அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 6 தொகுதிகளின் எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனால் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாகின. இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

தவெகவின் பலம் 109

இந்த 2 தொகுதிகளிலும் ஏற்கனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியான பிறகே இடைத்தேர்தல் நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 20 கெடு

இந்தச் சூழலில், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 20-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன... சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்... மேலும், தமிழகம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் 56 அதிகரிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் யாருக்கு வாய்ப்பு?

இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதில் திருச்சி கிழக்கு தொகுதியைத் தவிர மற்ற 4 தொகுதிகளிலும் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் எம்எல்ஏக்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி சீனியர் பிரமுகர்களான விராலிமலையில் சி.விஜயபாஸ்கர், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா, பெருந்துறையில் ஜெயக்குமார் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தவெகவில் இப்படியான பரபரப்பு என்றால், இந்த 5 தொகுதிகளிலும் தவெகவை எதிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2 தொகுதிகளில் இடைத் தேர்தலைச் சந்தித்துள்ள தவெக, அடுத்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

மார்ச்சுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல்?

இதற்கிடையே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் தகவல்களும் வெளியாகியுள்ளன. ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2027 மார்ச் 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனால் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சீரமைத்தல், வார்டுகளை மறுவரையறை செய்தல், இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

அதுமட்டுமல்லாமல், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளும் நடைபெற உள்ளன. இதனால் வரும் மார்ச் மாதத்திற்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளின் மாஸ்டர் பிளான்

இந்த 5 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தவெகவைப் பொறுத்தவரை, ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை, ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது.

திமுகவும் இந்த இடைத்தேர்தலை ஆளும் தவெக அரசுக்கு எதிரான தனது பலத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகப் பார்க்கலாம். இதனால் 5 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்துவது, கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிப்பது என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமடையலாம்.

சீமான் எடுக்கும் ரூட்

நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக கூறியுள்ள சீமான், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதியில் கூடுதல் அரசியல் கவனம் திரும்பியுள்ளது.

கார்த்திகா கைது எதிர்ப்பு

ஆனால், திமுகவும் அதிமுகவும் அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும், அதை கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியாகக் கருத முடியாது.. அதனால் நடக்க போகும் 5 தொகுதிகளின் இடைத் தேர்தலிலும் யார் யாருடன் போட்டியிடுவார்கள், எந்தக் கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+