சென்னையில் கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் அழுத்தி சொன்ன "இந்திய ஒன்றியம்", "இந்திய தேசிய கொடி"!
சென்னை: 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி சிறப்புயாரைற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடக்கத்திலேயே "இந்திய ஒன்றியம்", "இந்திய நாட்டு தேசியக் கொடி" என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அதிகாரப்பூர்வமாகவே மத்திய அரசு என்பதற்கு பதிலாக, ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதர அமைச்சர்களும் அத்தனை கூட்டங்களிலும் "இந்திய ஒன்றியம்" என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்திய ஒன்றியம் என்பதை மாநில சுயாட்சிக்கான உரிமை மீட்புச் சொல்லாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

சென்னையில் இன்று 77-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டின. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். முன்னதாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கோட்டையில் தேசிய கொடியேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்று "இந்திய ஒன்றிய"த்தின் விடுதலை நாள். "இந்திய ஒன்றி"யத்தின் முக்கிய அங்கம் நம் தமிழ்நாடு.
தமிழ்நாடு பெயர்: தாய்மொழியாம் தமிழை தாய் மொழியாக கொண்ட நம் தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மதராஸ் மாகாணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. 1968-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு - பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தமிழ் மண்ணின் முதலமைச்சராக ஆன பிறகுதான் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது. 'ஒரே ஒரு சங்கரலிங்கனார் தான் செத்துப் போயிருக்கிறார் என்று நினைப்பீர்களேயானால் "தமிழ்நாடு" என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் சேர்த்து ஐந்து உயிர்களைத் தரத் தயாராக இருக்கிறோம்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் கருணாநிதி.
தந்தை பெரியார் கேட்ட கேள்வி: 'எல்லாரும் பிரிந்து போனபிறகு தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் ஏன் இருக்க வேண்டும்? அதனைப் பார்த்துக் கொண்டு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?' என்று கேட்டவர் தந்தை பெரியார். இத்தகைய பார்போற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான், மூன்றாவது ஆண்டாக "இந்திய நாட்டின்" தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன். 400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தக் கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் எனது அன்பான வணக்கங்கள்
சுயாட்சிக் கொடி காத்த தலைவர்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சர்கள் அனைவருக்கும் விடுதலை நாளன்று கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்து - மாநில சுயாட்சிக் கொடியைக் காத்த தலைவர்தான் கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என்பது தமிழை - தமிழ்நாட்டைக் கொண்டாடுவது ஆகும் என்ற அடிப்படையில் அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
முதல் விடுதலை முழக்கம்: விடுதலைப் போராட்ட வீரர்களை ஏன் போற்றுகிறோம் என்றால் தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. சுதந்திர தாகத்தில், விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம்விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம்பெருமிதத்தோடு நினைவு கூரமுடியும்.

தமிழ்நாட்டில் விடுதலைப் போர்: 1600-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இங்கு காலூன்றியது என்று சொன்னால் அவர்களது அடக்குமுறைக்கு எதிராக உடனடியான சுதந்திர முழக்கத்தை எழுப்பிய மண் தமிழ்நாடு. 1857 சிப்பாய்க் கலகத்தைத்தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் 1755-ஆம் ஆண்டு முதல் தெற்கில் அதுவும் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நின்று கொடியை ஏற்றும்போது தமிழனாகப்பெருமைப்படும் - உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுதான் காரணம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications