8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா?
சென்னை: திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை, தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளதோடு, 'வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்' என்ற புதிய அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. இது வெறும் கவர்ச்சிகரமான வாக்குறுதியா அல்லது திட்டமிட்ட பொருளாதார நகர்வா என்பதைப் புரிந்து கொள்வது அவசியமானது.
இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற முக்கியக் காரணம் திமுக மீதான நம்பகத்தன்மைதான். கடந்த காலங்களில் 5,000 ரூபாய் போன்ற நேரடி நிதி உதவிகளை அரசு வழங்கியிருப்பதால், "திமுக சொன்னால் நிச்சயம் செய்யும்" என நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் திமுகவினர்.

வழக்கமாக அரசு ஒரு பொருளை மொத்தமாக கொள்முதல் செய்து நேரடியாக வழங்கும்போது, அதன் தரம் குறித்த அச்சமும், கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் விமர்சனங்களாக முன்வைக்கப்படும். ஆனால், இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'கூப்பன் முறை' வெளிப்படையான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் மக்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளை, தங்களுக்கு விருப்பமான கடைகளில் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இது பயனாளர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்குவதோடு, தரமான பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்கிறது. மேலும், மக்கள் இந்தக் கூப்பன்களைத் தங்களுக்கு அருகிலுள்ள சிறு மற்றும் நடுத்தரக் கடைகளில் பயன்படுத்தும்போது, உள்ளூர் பொருளாதாரம் வலுவடையும். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தெருக்கோடியில் இருக்கும் எலக்ட்ரானிக் கடைக்காரர்களுக்கும் இது பெரிய வணிக வாய்ப்பை உருவாக்கித் தரும்.

இந்தத் திட்டத்தை ஒரு மேம்போக்கான இலவசத் திட்டமாகப் பார்க்காமல், மக்களைப் பொருளாதாரத்தின் 'பங்கேற்பாளர்களாக மாற்றும் ஒரு முயற்சியாகவே நிபுணர்கள் கருதுகின்றனர். பெண்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வழங்குவதன் மூலம் வீட்டு வேலைகள் எளிதாகும். இந்த உதவி அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும்.
ஏற்கனவே தமிழகத்தில் கட்டணமில்லாப் பேருந்து பயணம் பெண்களுக்கு மாதம் சுமார் 900 ரூபாய் வரை சேமிப்பைத் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல, 8,000 ரூபாய் கூப்பன் மூலம் வாங்கப்படும் வாஷிங் மெஷின் போன்ற கருவிகள் பெண்களின் கடினமான வீட்டு வேலைகளைப் பெருமளவு குறைக்கும். இதன் மூலம் மிச்சமாகும் நேரத்தைப் பெண்கள் தங்களின் கல்விக்கோ, சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டுவதற்கோ அல்லது போதுமான ஓய்வு எடுப்பதற்கோ பயன்படுத்த முடியும். இது ஏற்கனவே 40.5% ஆக உயர்ந்துள்ள தமிழகப் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை மேலும் வலுப்படுத்தும்.
தொழிற்துறை ரீதியாகவும் இத்திட்டம் தமிழகத்திற்குப் பெரும் சாதகமாக அமையும். இந்தியா முழுமைக்கும் உள்ள பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழகத்தில்தான் உள்ளனர். வீட்டுப் பணிச்சுமை குறையும்போது தொழிற்சாலைகளுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். மேலும், தமிழ்நாடு மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தியில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பதால், இக்கூப்பன்கள் மூலம் உருவாகும் பொருட்களுக்கான தேவை உள்ளூர் தொழிற்சாலைகளுக்கே அதிக லாபத்தைத் தரும்.
மகளிர் உரிமைத் தொகை எப்படி மக்களின் வாங்கும் திறனை அதிகரித்து சந்தையில் பணப்புழக்கத்தை உண்டாக்கியதோ, அதேபோல இந்த 8,000 ரூபாய் கூப்பன்களும் தமிழகத்தின் தற்போதைய 11.19% பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களைப் பொருளாதார வளர்ச்சியில் நேரடியாகப் பங்கெடுக்க வைக்கும் ஒரு ஆக்கபூர்வமான நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது. எனவே துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications