"இந்த தடுமாற்றம் தன்னால் வந்ததல்ல”.. அமைச்சர் வன்னி அரசுக்கு ஆ.ராசா பதிலடி!
சென்னை: அமைச்சர் வன்னி அரசுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். "வன்னி அரசின் தடுமாற்றம் தன்னால் வந்ததல்ல, வேலை செய்யும் இடத்தால் விளைந்த நோய்" எனச் சாடியுள்ளார் ஆ.ராசா.
நாதக கட்சியைச் சேர்ந்த தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கார்த்திகா கைதைக் கண்டித்திருந்தார்.

"கார்த்திகா தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க அரசு நடந்துகொள்கிறது" எனக் கூறி இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதனை அமைச்சர் வன்னி அரசு விமர்சித்திருந்தார். விசிக துணைப் பொதுச்செயலாளரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு, "ஆரியக் கடப்பாறை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் சீமான்.
கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களைத்தான் ஏற்கும்; பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை" என கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். வன்னி அரசின் தடுமாற்றம் தன்னால் வந்ததல்ல, வேலை செய்யும் இடத்தால் விளைந்த நோய் எனச் சாடியுள்ளார் ஆ.ராசா.
ஆ.ராசா வெளியிட்டுள்ள பதிவில், "'அரைவேக்காடு'களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் 'தேவையற்ற கைதை' கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்! இந்தத் 'தடுமாற்றம்' தன்னால் வந்ததல்ல; 'வேலை' செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
