பக்கா ஸ்கெட்ச்.. விஜயகாந்த் பாணியில் அரசியலுக்கு வருகிறார் விஜய்? ரசிகர்கள் குஷி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு, நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்த் பாணியில் நடிகர் விஜய், அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளதன் முன்னோட்டம்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை, சென்னை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அரசியல் பிரவேசம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

கிரீன் சிக்னல்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பினால் சுயேச்சையாக போட்டியிடலாம் என்று அப்போது அவர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் பச்சைக் கொடி காட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது புதிது கிடையாது.

புகைப்படங்கள், கொடி
ஏற்கனவே சில தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டிருப்பதாக கூறப்பட்டாலும், இப்போது விஜய் புகைப்படம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி ஆகியவற்றை தேர்தல் பயன்படுத்திக்கொள்ள நடிகர் விஜய் அனுமதி அளித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுதான் இப்போது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் அரசியல்
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானவர் விஜயகாந்த். தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை அவர் உருவாக்குவதற்கு முன்பாக தனது ரசிகர் மன்றத்தின் சார்பாக அந்த மன்ற நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் நின்றனர். இதன் மூலம் மக்கள் மனதில் மறைமுகமாக விஜயகாந்துக்கு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கிய பிறகு சட்டசபை தேர்தலில் களம் கண்டார் விஜயகாந்த் என்பது வரலாறு.

விஜய் அரசியல் ஆர்வம்
நடிகர் விஜய் சமீபகாலமாக தனது திரைப்படங்களில் சமூக கருத்துக்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் கொண்டிருக்கிறார் என்று நீண்டகாலமாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இதன் காரணமாகத்தான், தலைவா என்று பெயரிடப்பட்ட அவரது திரைப்படம் வெளியாகும் போது சிக்கல்கள் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

விரைவில் அரசியல் என்ட்ரி
தற்போது திரையுலகத்தில் விஜய் உச்சத்தில் இருக்கிறார். அந்த கிராப் குறையும்போது அரசியலுக்கு வருவதை அவர் விரும்புவார் என்று கூறுகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக விஜயகாந்த் பாணியில் முதலில் உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் இயக்கத்தை களமிறக்கி விட்டு ஆழம் பார்க்க விரும்புகிறார் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக இருக்கிறது. எழுத்தாளர் ராம்கி ஒரு பேட்டியில் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன
ரசிகர் மன்றம் அல்லது மக்கள் மன்றம் போன்ற அமைப்புகளில் நிறைய பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களது குடும்பத்தினர் ஓட்டுக்களும் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் என்பதால் அதிகப்படியான ரசிகர் மன்றம் அல்லது மக்கள் மன்றம் வைத்திருக்கக்கூடிய நடிகர்களுக்கு இயல்பாகவே அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆசை வருவது வாடிக்கையாக இருக்கிறது. அதிலும் தமிழக அரசியல் சூழ்நிலையில் முன்னணி நடிகர்கள் அனைவருமே அரசியல் ஆசைக்கு உட்பட்டவர்கள்தான்.

அரசியல் ஆசையில் நடிகர்கள்
விஜயகாந்த் அரசியலில் எழுச்சி பெற்று இப்போது ஓய்வில் உள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்றார், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். இளம் நடிகராக இருந்தாலும் விஷால் கூட அரசியல் ஆசை உள்ளவர்தான். இதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கிடையாது. இப்போது உள்ள சூழ்நிலையில், அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில், அரசியல் ஆசை இல்லாமல் நடிப்பை மட்டுமே கவனித்து வருபவர் நடிகர் அஜித் மட்டும்தான் என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தில்.

விஜய் நடவடிக்கைகள்
கடந்த தேர்தலின் போது, நடிகர் விஜய் வாக்களிக்க வந்த போது சைக்கிளில் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக கண்டிப்பதற்காக அவர் இவ்வாறு வந்தார் என்று கூறப்பட்டது. திரைப்படங்கள் மட்டுமல்லாது நிஜத்திலும் இதுபோன்ற அரசியல் விவகாரங்களில் அவர் முன்னே நிற்கிறார். நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்த போது அவரது குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தை யாருக்கும் தெரியாமல் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். எனவே உள்ளாட்சி தேர்தல், நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு அச்சாரம் என்று அடித்துக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications