‘ஐபிசி 145’.. விடவே கூடாது.. அதிமுக பெயரையே ஓபிஎஸ் யூஸ் பண்ணக்கூடாது.. பாயிண்டை பிடித்த ஜெயக்குமார்!
சென்னை : அதிமுகவின் பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவது தவறு என்றும் அவர் கட்சியில் உறுப்பினர் கூட இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரே போடாகப் போட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற நிலையில், ஓபிஎஸ் விரைவில் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்காக போலீஸ் பாதுகாப்பு கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்தார்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.
கட்சியில் உறுப்பினர் அல்லாத ஓபிஎஸ்ஸை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுமதிக்கக் கூடாது எனவும், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

அதிமுக அடுத்தகட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ். முன்னதாக, எடப்பாடி பழனிசாமியும், தலைமை கழக நிர்வாகிகளும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முடியாது முடியாது
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நேற்று முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் தலைமை அலுவலகம் வர இருக்கிறார் என அவரது ஆதரவாளர் ஜே.டி.சி பிரபாகர் நேற்று மாலை தெரிவித்திருந்தார். அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்தார். ஆனால், பாதுகாப்பு தரமறுத்துள்ளது காவல்துறை. நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி பெற்று வரும்படி கூறியுள்ளது காவல்துறை.

போலீசில் ஜெயக்குமார் மனு
இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "அதிமுக தொண்டர்களின் கோயிலாக உள்ள அதிமுக அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் சூறையாடி பொருட்களை சேதப்படுத்தியதோடு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

ஓபிஎஸ் வருவது சட்டவிரோதம்
ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. IPC 145ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒருவரை தலைமைக் கழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. அதிமுக அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓபிஎஸ் அதிமுக தலைமைக் கழகம் வருவது என்பது சட்டவிரோதம். இதனால் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி-யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது
கட்சிக்கு தொடர்பில்லாத அவர் அதிமுக பெயரை பயன்படுத்துவது தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் இல்லை. ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இல்லாத நிலையில், அவர் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. " எனத் தெரிவித்தார்.

சாக்லேட்
மேலும், சசிகலாவை, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று திடீரெனச் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "என்னுடைய நண்பர் வைத்திலிங்கத்திற்கு அதிமுகவில் எந்த வேலையும் இல்லை. வெற்றிலை பாக்கு கொடுத்து அழைப்பது போல அமமுகவில் சாக்லேட் கொடுத்து அழைக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications