மதுரை, தேனி, சிவகங்கை.. 1 தொகுதியில் கூட வெல்ல முடியலை.. முக்குலத்தோர் ஆதரவை முற்றாக இழந்த அதிமுக!
மதுரை: மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அதிமுக முற்றாக இழந்ததாக என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் முக்குலத்தோர் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் அதிமுக பின் தங்கி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய நிலவரப்படி தவெக 107 தொகுதிகளிலும், திமுக 72 தொகுதிகளிலும், அதிமுக 55 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. காலையில் 2வது இடத்தில் இருந்த அதிமுக, தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் 50 இடங்களுக்கும் குறைவான சீட்களில் வெல்லும் என்று பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மதுரை, தஞ்சாவூர், விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் எந்த தொகுதியில் அதிமுக முன்னிலை பெறவில்லை. 2016 சட்டசபைத் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதியில் 8ல் அதிமுக வெற்றி பெற்றது. 2021 தேர்தலிலும் கூட அதிமுக 5ல் வென்றது.
வழக்கமாக தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூக மக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பார்கள். அதன் காரணமாக முத்துராமலிங்கத் தேவருக்கு தங்கத்தில் கவசம் செய்து ஜெயலலிதா கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை நெருக்கமாக வைத்து கொண்டதால், மறவர் மற்றும் அகமுடையார் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்து வந்தது.
2021 தேர்தலில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால், அதிமுகவுக்கு பெரிய வெற்றியை தென் மாவட்ட மக்கள் கொடுக்கவில்லை. அதேபோல் அதிமுகவில் முக்குலத்தோர் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்கப்படுவதாக பேச்சுகள் எழுந்தன. ஓபிஎஸ் உள்ளிட்டோரும் வெளியேறினர். இதனால் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை பெற அதிமுக பல்வேறு வழிகளில் முயற்சித்தது.
முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பரிந்துரை செய்வோம் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் முக்குலத்தோர் சமூக மக்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். முக்குலத்தோர் ஆதரவை அதிமுக முற்றாக இழந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே மதுரை, தஞ்சாவூர், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications