40 எம்பி இருக்க..சட்டமன்ற தீர்மானம் எதுக்கு? துரும்பை கூட கிள்ளிப்போடாத திமுக..எகிறி அடித்த எடப்பாடி
சென்னை: 38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணையச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வின் போது தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்தவதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல ஆண்டு காலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தனியே போர் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவலநிலையை உணர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன" என கூறினார். தொடர்ந்து சட்டசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான்..
நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று! 38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? இத்தீர்மானம் இந்த விடியா திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இதுபோன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை. நீட் தேர்வை பாராளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியால் கடந்த 2010ல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஒரே இயக்கம் என்ற அடிப்படையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications