மொத்த தெலுங்கு திரை உலகமும்.. அல்லு பக்கம் நின்ற போது.. ரேவதி பக்கம் நின்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி!
சென்னை: ஆணாதிக்கமும்.. ஹீரோ மோகமும் அதிகம் கொண்ட தெலுங்கு திரை உலகிற்கு யார் நிஜ ஹீரோ என்று பாடம் எடுத்துள்ளார் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி. உண்மையில் எது ரியல் ஹீரோயிசம்.. எது உண்மையான தலைமைப்பண்பு என்று பாடம் எடுத்துள்ளார் ரேவந்த் ரெட்டி.
ஆந்திர சினிமா ரசிகர்களுக்கு ஒரு குணம் உண்டு. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் extreme masculine celebration. அதீத கொண்டாட்டங்கள், ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்கள், முரட்டு தனமான ஆண் குணங்களை ரசிப்பது போன்ற தீவிர குணம் கொண்டவர்கள். அஞ்சலியை கைவைத்து தள்ளிவிடும் பாலையாவிற்கு விசில் அடிக்க எல்லாம் ஆந்திர சினிமா ரசிகர்களால் மட்டுமே முடியும். தமிழிலோ, மலையாளத்திலோ இது இப்போது சாத்தியம் இல்லை
அதிலும் இப்போது அவர்களின் ரசிக மனோபாவம் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கும் பரவி உள்ளது. ரசிக சண்டைகளில் மோதுவது பெண்களிடமும் அதிகரித்துள்ளது. இப்போது இணையத்தில் ரசிக சண்டை அதிகம் போடுவது.. மற்ற சினிமா உலகை விமர்சனம் செய்து மட்டம் தட்டி பேசுவது யார் என்று பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு தெலுங்கு சினிமா உலகம் என்று கூறிவிடலாம்.
டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயது பெண் உயிரிழந்தது மற்றும் அவரது மைனர் மகன் பலத்த காயம் அடைந்தது தொடர்பாக சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பொதுமக்களை கட்டுப்படுத்த தியேட்டரில் தெலுங்கானா போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரீமியர் காட்சிக்கு முன்னதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த இடத்திற்கு வந்தபோது, அவரது ரசிகர்கள் வெறித்தனமாகச் அவரை பார்க்க அருகில் சென்றனர்.. இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஒரு பெரிய சினிமாவிற்கு.. அதிலும் ரசிக வெறி கொண்ட ஒரு சினிமா உலகில்.. படம் ரிலீஸ் ஆகும் நாளில் பிரிமியர் ஷோவை பார்க்க வெளிப்படையாக செல்வது என்பது எவ்வளவு தவறான விஷயம். ஆனால் அந்த இங்கீதம் கூட இல்லாமல் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றது பெரிய அளவில் சர்ச்சையானது.

அதிலும் அர்ஜுன் வெறுமனே படத்தைப் பார்த்து விட்டுச் செல்லவில்லை. அவர் காரின் சன்ரூஃப்பில் இருந்து வெளியே வந்தார், தனது திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடிய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார், வாழ்த்தினார். இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. இந்த கூட்ட நெரிசலில்தான் ரேவதி என்ற பெண் பலியானார். 9 வயதே கொண்ட அவரின் மகன் ஸ்ரீ தேஜா மூச்சு பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் உள்ளார்.
இதற்காக கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் உடனே ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை கைது செய்ய ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. தற்போது அதே நடவடிக்கை பாராட்டுகளை பெற்று வருகிறது. அதற்கு பின்வரும் 4 காரணங்கள் உள்ளன.
காரணம் 1 - அல்லு அர்ஜுனை பார்க்க பல நடிகர்கள்.. முன்னணி ஹீரோக்கள் அவரின் வீட்டிற்கு சென்றனர். முக்கியமாக அல்லு அர்ஜுன் கைதானது என்னவோ வெறும் 3-4 மணி நேரம். அதற்குள் வெளியே வந்துவிட்டார் அப்படிப்பட்டவர் பார்க்க பல நடிகர்கள் கூடினார்கள்.
காரணம் 2- ஆனால் அதில் ஒருவர் கூட இறந்த ரேவதி குடும்பத்தை பார்க்க செல்லவில்லை. அல்லு அர்ஜுன் கூட செல்லவில்லை.
காரணம் 3- யாருமே கோமாவில் இருக்கும் அந்த சிறுவனை பார்க்க செல்லவில்லை.
காரணம் 4- நடிகர்களை பொறுத்தவரை சக நடிகர்கள்தான் அவர்களின் குடும்பம் ... ரசிகர்கள் அவர்களின் குடும்பம் இல்லை என்பதை இது உணர்ந்து உள்ளது. இறந்து போன அந்த பெண்ணின் குடும்பத்திற்காக ஆக்சன் எடுத்த ரேவந்த் ரெட்டியின் நடவடிக்கை சரியானது .. அவரின் நிலைப்பாடு சரியானது என்பதும் புலனாகிறது.
சமீபத்தில் கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை அடித்தே கொன்றார். தனது ரசிகர் மன்ற நிர்வாகி அவர். இதுதான் சினிமா உலகம். ரசிக மனோபாவம் எதற்கும் உதவாது என்பதற்கு இதுவே சான்று. இதன் காரணமாகவே ரேவந்த் ரெட்டியின் நடவடிக்கையும் இப்போது வரவேற்பை பெற தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications