பட்டினப்பாக்கம் பழைய குடியிருப்புகளை இடிக்க முடிவு! தமிழக அரசு திடீர் அறிவிப்பு! வருது தலைமை செயலகம்
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு மீனவ மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்குள்ள பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்
தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி நிலவுவதால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட அரசு திட்டமிட்டது. இதற்காக சென்னை மெரினா கடற்கரை சாலையின் தெற்கு முனையில் அமைந்துள்ள பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில், 15 மாடிகளுடன் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்தக் கட்டடத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பழைய கட்டடங்களை இடிக்க டெண்டர் கோரிய TNHB
புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள நிலப்பரப்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஏராளமான பழைய அரசு ஊழியர் குடியிருப்புக் கட்டடங்கள் உள்ளன. பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படும் இந்தக் கட்டடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தினால்தான் தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியும்.
இதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளைப் பாதுகாப்பாக இடித்து அகற்றுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோரியுள்ளது. கட்டடங்களை இடிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக விவகாரத்தில் அடுத்தடுத்த நிர்வாக நகர்வுகளை விஜய் அரசு தீவிரப்படுத்தி வருவதையே இந்த டெண்டர் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
மீனவ மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பு
மறுபுறம், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை ஆரம்பம் முதலே அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நோச்சிக்குப்பம், முல்லிகுப்பம் உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் இணைந்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
தங்களின் பாரம்பரிய வாழ்வாதார நிலமான கடற்கரையோரப் பகுதியில் தலைமைச் செயலகம் அமைந்தால், கடலுக்குச் செல்லும் வழிகள், படகுகளை நிறுத்தும் இடங்கள், மீன் வலைகளைப் பழுதுபார்க்கும் மைதானங்கள் மற்றும் மீன் வியாபாரம் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் விஐபி பாதுகாப்பு மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தங்களின் அன்றாட வாழ்க்கை முடங்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மீனவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் இத்தகைய பிரம்மாண்ட கான்கிரீட் வளாகத்தை அமைப்பது கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பட்டினப்பாக்கம் பகுதி எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்களோ, அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் குறித்த தகவல்களோ தங்களிடம் இல்லை என்று பொதுத்துறை தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அரசு இந்த இடத்தை மாற்றிவிட்டு, அண்ணா சாலை தீவுத்திடல் அல்லது நந்தனம் போன்ற மாற்று இடங்களைப் பரிசீலிக்கும் என்றும் பேசப்பட்டது.
ஆனால், தற்போது வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளை இடிப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளதன் மூலம், பட்டினப்பாக்கத்திலேயே புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கும் முதற்கட்டப் பணிகளை அரசு கைவிடவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஒருபுறம் மீனவர்களின் வாழ்வாதாரக் குரலும் போராட்டங்களும் தீவிரமடைந்து வர, மறுபுறம் அரசு டெண்டர் விட்டு பணிகளை முன்னெடுப்பது பட்டினப்பாக்கம் பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
