அக்யூஸ்டை பாதுகாக்கிறார் அன்பில் மகேஷ்! ஊழலில் ஈடுபட்ட உடன் படித்தவர்! ஹைகோர்ட்டில் வாதிட்ட சிசிபி!
சென்னை: தனியார் பள்ளிக்ளுக்கு அங்கீகாரம், அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. விசாரணையின் போது, வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தான் பாதுகாக்கிறார் எனவும், அமைச்சருடன் தான் அவர் படித்தார் அரசுத் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் போலீசாரின் சம்மனை ஏற்று, செப்டம்பர் 18 ஆம் தேதி விசாரணைக்காக காவல் துறையினர் முன் ஆஜரானதாகவும், அப்போது 240 கேள்விகளை எழுப்பி, எட்டு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திருச்சி, சென்னையில் தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போலீசார், ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது, 10 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதனை ஏற்று ஏழு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை சமர்ப்பித்துள்ளதாகவும், அன்பில் மகேஷ் தப்பிச் செல்ல மாட்டார். சாட்சிகளை கலைக்க மாட்டார். முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் எப்போது வேண்டுமானாலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக தயார். அதனால் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. கைது செய்யப்பட்ட மூன்று பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அனைத்து ஆவணங்களும் அரசிடம் தான் உள்ளன என்றார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக உள்ளார். குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை. இது ஒரு நிதி பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட வழக்கு இது. 400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கினால் எதுவும் வெளிவராது.
அதனால் அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முத்துக்குமாரை, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தான் பாதுகாக்கிறார். முத்துக்குமார், அன்பில் மகேஷுடன் படித்தவர். பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.



Click it and Unblock the Notifications
