சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ்.. முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் புதிய தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Anbumani Ramadoss says TN assembly should pass resolution about tamil official language

இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அதற்கான நேரம் வந்து விட்டதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரமணாவும் தெரிவித்திருக்கிறார். இருவரது கருத்துகளும் வரவேற்கத்தக்கவை.

டெல்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்களின் கூட்டு மாநாட்டில் பேசும் போது இந்தியப் பிரதமரும், இந்திய தலைமை நீதிபதியும் இதை கூறியுள்ளனர். நீதிமன்றங்களில் தாய்மொழியை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா கூறியிருப்பது இது முதல் முறையல்ல.

இதற்கு முன் கடந்த நவம்பர் 26 ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய போதும், உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதன் மூலம் நீதி வழங்குவதை எளிமையாக்க வேண்டும் என்று நீதியரசர் ரமணா கூறியிருந்தார். உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி பயன்பாட்டுக்கு எதிரான மனநிலை மறைந்து, ஆதரவான நிலை உச்சநீதிமன்ற தலைமைக்கு ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

இந்த மாற்றத்தின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அன்னை தமிழ் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வலியுறுத்தலை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை 2006ஆம் ஆண்டு திசம்பர் 6 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அதன் பின் 15 ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழ் வழக்காடும் மொழியாக ஆக்கப்படவில்லை.

தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு சட்டரீதியாகவோ, கட்டமைப்பு ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இதைப் பயன்படுத்தி அலகாபாத், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்படும் போது, நீதிமன்ற நடவடிக்கைகளை மொழியாக்கம் செய்ய மொழி பெயர்ப்பாளர்கள், குறிப்பெடுக்க தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தாளர்கள் நியமிக்கப்படுவார்கள்; உயர் நீதிமன்ற கணினிகளில் தமிழ் மென்பொருள் வசதி ஏற்படுத்தப்படும்; தீர்ப்புத் திரட்டு என்ற பெயரில் வெளியாகும் தமிழ் இதழில் அதிக எண்ணிக்கையிலான தீர்ப்புகளை முழுமையான மொழிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழ் சட்ட புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட நூலகம் அமைத்துத் தரப்படும்; அதற்கு சட்ட மொழிபெயர்ப்புகள் & சொல்லகராதிகள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தரப்படும் என்றும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கலைஞர் உறுதியளித்தார். ஆனால், அப்போதைய மத்திய அரசு, தாமாக முடிவெடுப்பதற்குப் பதிலாக உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டது. உச்சநீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி, தமிழகத்தின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் தான் பாலைவனப் பயணத்தின் போது தென்படும் சோலைவனத்தைப் போல, நீதிமன்ற விசாரணைகளை உள்ளூர் மொழிகளில் நடத்தப்படும் என்று பிரதமரும், தலைமை நீதிபதியும் ஒரே நேரத்தில், ஒரே நிகழ்வில் கூறியிருப்பது சாதகமான திருப்பம் ஆகும். இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி 15 ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே, தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் புதிய தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
PMK Rajyasabha MP Anbumani Ramadoss says TN assembly should pass resolution as Tamil is HC's official language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X