சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கல்வி கொள்கையின் மும்மொழி திட்டம் என்பது சமஸ்கிருதத் திணிப்பு- அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்றாவது மொழியை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும் கூட, அது தொடர்பான மத்திய அரசின் விதிகளில் சமஸ்கிருதத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதத் திணிப்பாகவே அமையும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு என்று கூறி, புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சில திட்டங்கள் வரவேற்கக்கூடியவையாக இருந்தாலும் கூட, பெரும்பாலான திட்டங்கள் மொழித்திணிப்பையும், ஏழை அடித்தட்டு மக்களிடமிருந்து பள்ளிக்கல்வியை பறிப்பதையும் தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்தக் கொள்கை ஆபத்தானது.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில், 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தவும் தான் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய அம்சமே எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தான்.

3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு

3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு

ஆனால், கடந்த ஆண்டு சட்டத்திருத்தம் மூலம் 8-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது அதைவிட மோசமாக 3, 5, 8 ஆகிய 3 வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், முதல் வகுப்பில் பள்ளியில் சேரும் குழந்தைகள் அடுத்த மூன்றாவது ஆண்டிலேயே பள்ளிப்படிப்பை கைவிடும் நிலை உருவாகி விடும். இந்தியாவின் ஊரக மக்கள், தங்களின் பிள்ளைகளை சில கட்டாயங்களின் அடிப்படையில் தான் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அவர்கள் ஏதேனும் வகுப்பில் தோல்வியடைந்தால், உடனடியாக படிப்பை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 3&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்பது ஊரக மாணவர்களின் பள்ளிக்கல்விக்கு முடிவு கட்டுவதாகவே அமையும்.

3-ம் வகுப்புக்கும் பொது தேர்வு கொடூரம்

3-ம் வகுப்புக்கும் பொது தேர்வு கொடூரம்

5 மற்றும் 8ஆம் வகுப்புக்கே பொதுத்தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடாகும். கல்வி முன்னேற்றம் என்ற பெயரில் 3-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரமானதாகும். மத்திய அரசு பள்ளிகளில் முதல் இரு வகுப்புகளுக்கு தேர்வுகளே நடத்தப்படுவதில்லை. அத்தகைய சூழலில் குழந்தைகள் எழுதும் முதல் தேர்வு என்பதே பொதுத்தேர்வு என்பது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். 8ஆம் வகுப்பு வரை எந்த வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.

சமஸ்கிருத திணிப்பா?

சமஸ்கிருத திணிப்பா?

மாணவர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்ள வசதியாக மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப் படும் என்ற அறிவிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்றாவது மொழியை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும் கூட, அது தொடர்பான மத்திய அரசின் விதிகளில் சமஸ்கிருதத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதத் திணிப்பாகவே அமையும்.

பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் திறமையை மட்டும் மதிப்பிடாமல், புலமையும் சேர்த்து மதிப்பிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமைகள் தேர்வு மற்றும் அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால், புலமை எவ்வாறு மதிப்பிடப்படும் என்பது தெரியவில்லை. இது முறைகேடுகளுக்குத் தான் வழிவகுக்கும்.

தனியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி

தனியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி

கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முறைக்கு 15 ஆண்டுகளில் முடிவு கட்டப்படும் என்றும், அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது. ஆனால், தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்று அவற்றின் மேற்பார்வையில் செயல்படுவது தான் சரியானதாக இருக்கும். தனியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அளித்தால் விதிமீறல்களும், முறைகேடுகளும் அதிகரிக்கும்.

கட்டாய நுழைவுத் தேர்வு

கட்டாய நுழைவுத் தேர்வு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி ஏற்கனவே கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நுழைவுத் தேர்வு என்பது அவர்களை உயர்கல்வியில் நுழையவிடாத தேர்வாக அமைந்துவிடும். இத்திட்டத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.

மக்கள் ஆலோசனைகள் புறக்கணிப்பு

மக்கள் ஆலோசனைகள் புறக்கணிப்பு

தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி வெளியிடப் பட்டு கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களும் கோரப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான புதிய திட்டங்களை ஆலோசனையாக வழங்கியது. அவை ஏற்கப் பட்டிருந்தால் மாணவர்கள் நலனை பாதிக்கும் மேற்கண்ட திட்டங்கள் புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டு இருக்காது. ஆனால், மக்களின் யோசனைகள் சேர்க்கப்படாததில் இருந்தே கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. மேற்கண்ட திட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

தாய்மொழிக் கல்வி

தாய்மொழிக் கல்வி

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழி தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்; வாய்ப்பிருந்தால் அதை எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது படிப்படியாக பள்ளிக்கல்வி முழுமைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நடுநிலை வகுப்புகளிலேயே தொழிற்கல்வி அறிமுகம் செய்யப்படுவதும் வரவேற்கத்தக்கதே.

வரவேற்கத்தக்க அம்சஙக்ள்

வரவேற்கத்தக்க அம்சஙக்ள்

பள்ளிக்கல்வியை 11 ஆண்டுகளாக குறைந்து, பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக அதிகரிப்பது, பட்டப் படிப்பிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற அனுமதிப்பது, எம்.பில் படிப்பு கைவிடப் படுவது ஆகியவை வரவேற்கப்பட வேண்டியவையாகும். உயர்கல்விக்கான ஒழுங்குமுறைகள் பெரும்பாலும் தனியாருக்கு சாதகமானவையாக இருப்பதால், உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அரசு விலகிக் கொள்ளுமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்த ஐயத்தை மத்திய அரசு போக்க வேண்டும்.

கல்வி கட்டண ஆணையம்

கல்வி கட்டண ஆணையம்

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கட்டண விகிதத்தை நிர்ணயிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆணையம் தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்; அதேநேரத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணத்தை உயர்த்த புதிய கட்டண நிர்ணய ஆணையம் வழி செய்து விடக்கூடாது.

கல்விக்காக 6% செலவு

கல்விக்காக 6% செலவு

கல்விக்காக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியின் அளவை இரு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்த வேண்டும். இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல அம்சங்கள் இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களும் ஏராளமாக உள்ளன. எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கி, புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு தேவையான திருத்தங்களைச் செய்து வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, 1964-ஆம் ஆண்டின் கோத்தாரி ஆணைய அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான அம்சங்களை புதிய கொள்கையில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK Youth Wing leader and Rajyasabha MP Anbumani Ramadoss statement on Centre's New Education Policy, Anbumani Rmadoss listed Positives and Negatives of NEP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X