வரும் ஆனா.. வராது! விஜய்யின் வாரிசு படத்துக்கு வரிசை கட்டும் வம்புகள்! டென்ஷனான படக்குழு! என்னாச்சு?
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தின் மூலம் யானையை அனுமதியின்றி படப்பிடிப்பில் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தமிழ் திரை உலகில் எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் வைத்து பார்க்கப்படுபவர் விஜய். இளைய தளபதியாக அறிமுகமாகி தற்போது தளபதி என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் உருவ கேலி, தொடர் தோல்விகள் என துவண்டு போயிருந்த விஜய் பூவே உனக்காக படத்திற்கு பிறகு தமிழ் திரை உலகின் முன்னணி நாயகனாக உருவானார். அதில் அவரது தந்தையின் பங்கும் அதிகம்.

நடிகர் விஜய்
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களில் சாக்லேட் பாயாக நடித்து ரசிகைகள் மனதில் இடம் பிடித்தவர். அடுத்து திருமலை, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட ஆக்சன் படங்களில் புதிய அவதாரம் எடுத்து தற்போதைய நிலையில் தமிழகத்தின் நம்பர் ஒன் வசூல் நாயகனாக திகழ்கிறார். இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

வாரிசு
படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ரஞ்சிதமே' நேற்று யூடியூபில் வெளியானது. தமன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. நடிகர் விஜய்யுடன் முதன்முறையாக இயக்குநர் வம்சி படிப்பள்ளி சேர்ந்திருப்பதும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பினை கூட்டி இருக்கிறது. விஜய் என்றாலே சர்ச்சைகள் சூழ்ந்து கொள்வதும் வழக்கம்.

மீண்டும் சர்ச்சை
வாரிசு படமும் இதற்கு விதிவிலக்கல்ல ஏற்கனவே மெர்சல் படத்தில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது அதே சர்ச்சையில் மீண்டும் சிக்கி இருக்கிறது வாரிசு திரைப்படம். வாரிசு படத்தின் இறுதி கட்ட மற்றும் முக்கிய காட்சிகள் சென்னை அருகே நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதி இல்லாமல் யானைகளை அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

யானையால் வந்த சிக்கல்
இது தொடர்பாக செய்தியை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தாக்கியதாகவும் மற்றொரு சர்ச்சை இருக்கிறது. அது வேறு கதை. இந்நிலையில் அனுமதியின்றி யானையை படப்பிடிப்பில் பயன்படுத்தியது தான் வாரிசு படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் படப்பிடிப்பு தளத்திற்கு கஜ பூஜை என்று யானையை அழைத்து வந்துள்ளதும், படப்பிடிப்புக்கான அனுமதி பட குழுவிடம் இல்லை என்பது தான் பிரச்சனை. இது தொடர்பான அனுமதி கடிதத்தை போலீசாரிடம் படக்குழு ஒப்படைக்கவில்லை.

விலங்குகள் நல வாரியம்
இந்த விவகாரம் பெரிய அளவில் பிரச்சனையான நிலையில் வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதியின்றி யானையை பயன்படுத்தியது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே வாரிசு படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பண்டிகை நாட்களில் வெளியிடக்கூடாது என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கிய நிலையில் வாரிசு வட குழுவுக்கு மற்றொரு பின்னடைவாக இந்த நோட்டீஸ் விவகாரம் பார்க்கப்பட்டது.

தீவிர ஆலோசனை
ஏற்கனவே தமிழகத்தில் வாரிசு படத்திற்கு போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் பட குழு யானையைப் பயன்படுத்திய விவகாரம் தீவிரமடைந்தால் பட வெளியீட்டில் பிரச்சனைகள் ஏற்படும். அதே நேரத்தில் யானை இடம் பெற்ற காட்சிகளை படத்தில் இடம்பெற வைத்து அதனை தணிக்கை குழுவுக்கு அனுப்பினாலும் அது தொடர்பான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டி வரும். இப்படி அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் தரப்பு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

கிராஃபிக்ஸ் காட்சிகள்
மேலும் விலங்குகள் நல வாரியத்திற்கு விளக்கம் அளிக்கவும் படக்குழு தயாராக இருக்கிறது. அந்த வகையில் யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தவில்லை எனவும் பூஜைக்கு மட்டுமே அழைத்துவரப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட இருக்கிறது. மேலும் யானைகளை வைத்து எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கிராபிக்ஸ் காட்சிகளை சேர்க்கலாமா எனவும் தயாரிப்பு தரப்பு தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறுகின்றனர்.