தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறைகிறதா? கல்வி அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன தகவல்
சென்னை: அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளி கல்வி கட்டணம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. சட்டப்படி பள்ளிகள் தொடங்க அனுமதி இருக்கிறது. தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெறுவது என்பது அது பிள்ளைகளையும், பெற்றோரையும் பாதித்து வந்தது. நாங்கள் இப்போது கல்வியமைப்பில் லஞ்ச லாவண்யத்தை ஒழித்துள்ளோம்.
அதேநேரம் தனியார் பள்ளிகளில் ஆய்வு என்பதை மிகத்தீவிரப்படுத்தியுள்ளோம். தனியார் பள்ளிகள் கோடி, கோடியாக லஞ்சப்பணத்தை முன்பு கொடுத்திருக்கிறார்கள். இப்போது அது இல்லை. எனவே கல்வி கட்டணத்தை குறையுங்கள் என தனியார் பள்ளிகளிடம் சொல்கிறோம். தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பின்பற்றுங்கள் என அறிவுறுத்தி உள்ளோம். அவர்களிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக நாங்கள் அரசு நிர்ணயிக்கும் தனியார் பள்ளி கட்டண ஒழுங்குமுறைக்குழுவை மறுசீரமைக்க உள்ளோம். அந்த குழு மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அந்த கட்டணத்தைத்தான் வாங்க வேண்டும். கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என சொல்ல இருக்கிறோம். இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்" என்றார்.
அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "அரசு பள்ளிகளில் குழந்தைகள் சீருடைகளை எப்படி மேம்படுத்தலாம்? காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு விடுதலை கொடுக்கும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த அறுசுவை உணவாக காலை உணவை கொடுக்கும் நோக்கில் அதை எப்படி மாற்றலாம்? என்பது குறித்து நான் கோரிக்கை வைத்துள்ளேன்.
தமிழ்நாட்டில் நீதி கட்சி பள்ளி மாணவர்களுக்கு உணவு கொண்டு வந்தது. காமராஜர் ஆட்சி மதிய உணவாக ஆக்கியது. கலைஞர் முட்டை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். சத்துணவாக மாற்றினார். ஜெயலலிதா வாரந்தோறும் முட்டை கொண்டுவந்தார். இப்படியாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சத்துணவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. அதேபோல, வாரத்துக்கு ஒரு முறை சிக்கன் பிரியாணி போடலாமே! என நான் ஆசைப்பட்டேன். அந்த கோரிக்கையையும் முதல்வர் விஜய் அவர்களிடம் முன்வைத்திருக்கிறேன். இது பல துறைகள் சம்பந்தப்பட்டது. முதல்வர் அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்.
மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய நிதி வழங்கவில்லை. இதனால் தமிழ்நாட்டின் வருங்காலம் இதனால் பாதிக்கப்படுகிறது. நம்முடைய பட்ஜெட்டில் அதிக பணத்தை அரசு பள்ளிகளுக்காக செலவு செய்து வருகிறோம் இது அறிவின் மீதான முதலீடு. பல காரணங்களை கூறி மொழி, கொள்கை பிரச்சினைகளுக்காக மத்திய அரசு நிதியை தடுப்பது ஏற்புடையது கிடையாது. எனவே பள்ளி நிதியை கட்டாயமாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை மூலமாகவோ, சட்டப்பூர்வமாகவோ எத்தகைய விஷயத்தை முன்னெடுக்க முடியுமோ? அதை தவெக அரசு எடுக்கும்.
கடந்த ஆட்சியாளர்களின் நல்ல திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது. அம்மா உணவகத்தில் உணவுத்தரம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் விஜய் அவர்களை பொறுத்தவரையில் வேற்றுமையை வளர்க்காது, பகையை தொடராது, போட்டிப் போடுவது என்பது நல்ல திட்டங்களை கொண்டு வருவதில் இருக்கும். நல்ல திட்டங்களில் இருக்கும் குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு தொடரும்" இவ்வாறு கூறினார்.


Click it and Unblock the Notifications
