• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லை எனக் கூறுகிறார் அக்கட்சியிலிருந்து விலகிய ஆஸ்பயர் சுவாமிநாதன்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட இவர், கடந்த 7 ஆண்டுகளாக அக்கட்சிக்கு சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொண்டு வந்தவர்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து திடீரென அவர் விலகியுள்ள சூழலில் அதற்கான காரணம் குறித்து பேசுவதற்காக நாம் அவரை தொடர்பு கொண்டோம்.

Aspire Swaminathan explains why he left the Admk party

அப்போது அவர் கூறியதாவது;

கேள்வி: அதிமுகவிலிருந்து விலகிக் கொள்வோம் என்ற எண்ணம் எப்போது உங்களுக்கு தோன்றியது..?

பதில்: அதிமுகவில் ஐடி விங்கிற்கும், நான் அதில் வகித்த பொறுப்புக்கும் உரிய மரியாதை இல்லை என்பதால் கடந்த பிப்ரவரி மாதமே அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்தேன். பிப்ரவரி 26-ம் தேதி இது குறித்து தலைமையிடம் பேச நினைத்த நிலையில், அதற்குள் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிட்டது. அந்த நேரத்தில் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வது முறையாக இருக்காது என்பதால், சரி இருந்து தேர்தல் மேட்சை ஆடிவிட்டு பிறகு பதவியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என நினைத்தேன். இதனிடையே கட்சியில் நான் வகிக்கும் பதவியிலிருந்து ராஜினாமா செய்து கொள்வதாக ஜூன் 9-ம் தேதி தலைமைக்கு கடிதம் கொடுத்தேன். அதுமட்டுமல்லாமல் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும், தகுதிவாய்ந்த புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் பரிந்துரை செய்திருந்தேன். நான் கடிதம் கொடுத்து 10 நாட்களுக்கு மேலாகியும் தலைமை என்னை அழைத்துப் பேசவில்லை, என்னவென்று விசாரிக்கவில்லை. இதற்குபிறகும் இந்தக் கட்சியில் ஏன் இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. சரி விலகிக் கொள்வதே நல்லது என நினைத்தேன். அதன்படி விலகிக்கொண்டேன்.

கேள்வி: ஜெயலலிதா தலைமைக்கும் -ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன..?

பதில்: அம்மாவை பொறுத்தவரை தொலைநோக்குடன் செயல்படக் கூடியவர். அதனால் தான் அப்போதே கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கி செயல்பட வைத்தவர். அதேபோல் சரியோ, தவறோ அம்மா துணிச்சலுடன் முடிவெடுக்கக் கூடியவர். எந்தவொரு முடிவையும் காலம் தாழ்த்தமாட்டார். ஆனால் இப்போதுள்ள தலைமை ஒரு முடிவெடுக்கவே மிகவும் தடுமாறுகிறது. அரசியலில் Decision making என்பது மிக மிக முக்கியம். காலம் தாழ்ந்து எடுக்கும் எந்த ஒரு முடிவாலும் யாருக்கும் பலனில்லை என்ற தத்துவம் நிர்வாகவியலில் உள்ளது. உதாரணத்துக்கு ஐடிவிங் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக நான் லிஸ்ட் கொடுத்து 3 மாதங்களாகியும் யாரையும் நியமிக்கவில்லை. நிர்வாகிகளே இல்லாமல் எப்படி ஐடி விங் அணியை செயல்படுத்த முடியும். தகுதிவாய்ந்த நபர்கள் எத்தனையோ பேர் இருந்தும் அதிமுக தலைமை ஒதுக்கி வைத்திருந்தது.

கேள்வி: நீங்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளராக அறியப்பட்டீர்கள் -அப்படியிருக்கும் போது அவர் உங்களிடம் பேசவில்லையா..?

பதில்: கடிதம் கொடுப்பதற்கு முதல் நாள் நான் அவரை தொடர்பு கொண்டு விவரத்தை எடுத்துரைத்தேன். பொறுமையா இருங்கன்னு என்னிடம் அவர் கூறினார். ஓ.பி.எஸ். பொறுமையாக இருப்பார், அதற்காக எனக்கு உரிய அங்கீகாரம் இல்லாத இடத்தில் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. ஓ.பி.எஸ்.சின் பொறுமையை பார்த்து பொறுமையே ஒருநாள் பொறுமை இழந்துவிடும்.

கேள்வி: உங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்..?

பதில்: தெரியவில்லை. உலகம் ரொம்ப பெரிசு.

கேள்வி: சசிகலாவுக்கு எதிரான தீர்மானங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..?

பதில்: சசிகலா தான் கட்சியிலேயே இல்லை என்கிறார்களே, பிறகு எதற்கு கட்சியில் இல்லாத ஒருவருக்கு எதிராக மாவட்டந்தோறும் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். சசிகலாவை பார்த்து இப்போதுள்ள அதிமுக தலைமைக்கு ஒரு பயம் வருகிறது என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள் இதை நான் சொல்லவில்லை, மக்கள் பேசுவதை தான் இங்கு குறிப்பிடுகிறேன். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வரும் போது கட்சிக் கொடி கட்டக்கூடாது என்றார்கள். பிறகு திறக்கப்பட்ட அம்மாவின் நினைவிடத்தை சசிகலாவுக்கு அஞ்சி சீல் வைத்தார்கள். சசிகலாவுக்கு சப்போர்டாக நான் பேசுவதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் பேசுவதை தான் சுட்டிக்காட்டுகிறேன்.

கேள்வி: அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் உங்களது பணிகள் பற்றி சொல்லுங்க..

பதில்: கடந்த 2014-ம் ஆண்டு Ammas Voice என்ற புதிய பிரச்சார யுத்தியை கொண்டு வந்தேன். திமுக, காங்கிரசுக்கு எதிராக அம்மா மேற்கொண்ட பிரச்சாரங்களில் இருந்து சில வரிகளை தொகுது செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என ஒவ்வொரு வாக்காளருக்கும் அலைபேசி மூலம் அம்மாவே நேரடியாக பேசுவது போல் பரப்புரை செய்தோம். அது அப்போது பெரியளவில் ரீச் ஆனது. அதேபோல் 2015 வெள்ளத்தின் போது வாட்ஸ் அப் வார்ரூம் அமைத்து எண்ணற்ற பணிகளை செய்திருக்கிறோம். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக ஐடி விங் முழுவீச்சில் களமாடி பணியாற்றியது. இதற்கெல்லாம் காரணம் அம்மா ஒருவரை நம்பி பொறுப்புக் கொடுத்தால் அவர் அந்த பொறுப்பை மிகச் சரியாக செய்ய வேண்டும். இல்லையென்றால் தொலைத்துவிடுவார். உங்களுக்கு ஒரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன், உங்கள் கார் ஓட்டுநர் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து அவரை ப்ரியாக விட்டால் தான் அவர் நிம்மதியாக கார் ஓட்ட முடியும். இரண்டாவது கியரில் போ, ஏன் 4-வது கியரில் போகிறாய் என்று அந்த ஓட்டுநர் மீது நம்பிக்கையில்லாமல் அவரிடம் கூறிக்கொண்டே வந்தால் அவர் என்ன செய்வார். இந்தங்க உங்க கார் என்று சாவியை கொடுத்துவிட்டு போய்விடுவார். அம்மா காலத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இருக்கும். இப்போதுள்ள தலைமை உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை தருவதில்லை. அதிமுக எதை நோக்கி போகிறது என எனக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் நினைத்து புலம்புகிற ஆல் நானில்லை. நமக்கு செட் ஆகல விலகிட்டேன்.

கேள்வி: உங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் ஆளுநர் உரையை மேற்கோள் காட்டி ஸ்டாலின் படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறீர்கள் - இதை எப்படி எடுத்துக்கொள்ளலாம்..?

பதில்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்கான கொள்கைகளை கையில் வைத்திருக்கிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். இதை நான் மட்டும் சொல்லவில்லை. ஸ்டாலினின் அதிகாரிகள் தேர்வு மிக அருமை. முதலமைச்சர் டீம் உண்மையிலேயே மிகச் சிறப்பாக செயல்படக் கூடியது. முதல்வர் டீமில் உள்ள அதிகாரிகள் அனைவருமே திறமையானவர்கள். நான் இன்று எந்தக் கட்சியிலும் இல்லை. தமிழக அரசு, தமிழக முதலமைச்சர் என்ற பார்வையில் தான் இதை நான் பார்க்கிறேன்.

English summary
Aspire Swaminathan explains why he left the Admk party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X