ரவுடி மொழி.. பண்பற்ற-நாகரீகமற்ற நபர் தான் பாஜகவின் அண்ணாமலை.. திமுக செந்தில்குமார் எம்பி கொதிப்பு
சென்னை: தமிழகத்தில் தற்போதைய பாஜக தலைவர் பண்பற்ற, கலாச்சாரமற்ற, தூய்மையற்ற அரசியல் கண்ணியமற்ற நபராக உள்ளார். ரவுடிகள் மொழியை பத்திரிகையாளர் சந்திப்பில் பயன்படுத்துகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை திமுகவின் தர்மபுரி எம்பி செந்தில்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சமீபகாலமாக தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. பொது மேடைகள், டுவிட்டர் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் அவர்கள் கருத்துகள் பதிவிட்டு ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
இந்த கருத்து மோதல்கள் நேற்று முதல் இன்னும் தீவிரமாகி உள்ளது. நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

ஆடு இமோஜியுடன் விமர்சனம்
நேற்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடு இமோஜியை பதிவிட்டு, "தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசியக்கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு" என பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்திருந்தார்.

செருப்புக்கூட நிகரில்லை
இதற்கு அண்ணாமலை கடும் வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். ‛‛முன்னோர்களின் இனிஷியலை வைத்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவரது கூட்டம் வா்கிறது. தானாக உருவாகியிருக்கும் ஒரு விவசாயியின் மகனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெரும் பரம்பரை, வெள்ளிக் கரண்டியுடன் பிறந்ததைத் தவிர, இந்த ஜென்மத்தில் வேறு எதையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யவில்லை. அவர் அரசியலுக்கும், மாநிலத்திற்கும் சாபக்கேடு என்றும் அண்ணாமலை சாடியுள்ளார். என் செருப்புக்கூட அவர் நிகரில்லை'' என காட்டமாக தெரிவித்து இருந்தார்.

திருப்பி அடிப்போம் என பேட்டி
மேலும் இன்று சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛திமுக தான் மதஅரசியல் செய்கிறது. திமுக மிரட்டும் தொனியில் அரசியல் செய்தால் அதை கண்டு பயப்படமாட்டோம். நான் இயேசு கிறிஸ்து அல்ல. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டும் அவசியம் இல்லை. திருப்பி அடிப்போம்'' என ஆக்ரோஷமாக கூறியிருந்தார்.

தர்மபுரி திமுக எம்பி எதிர்ப்பு
இந்நிலையில் தான் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛தமிழக பாஜகவில் மரியாதைக்குரிய தலைவர்களாக டாக்டர் தமிழிசை, டாக்டர் முருகன், ராதா கிருஷ்ணன் போன்றோர் இருந்தார்கள். தற்போதைய மாநில தலைவர் என்பவர் பண்பற்ற, கலாச்சரமற்ற, தூய்மையற்ற, இழிவான, அரசியல் கண்ணியமற்ற நபராக உள்ளார். ரவுடிகள் பயன்படுத்தும் மொழியை பத்தரிகையாளர் சந்திப்பு உள்ப பிற இடங்களில் பயன்படுத்துகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications