வேட்டி கரையை கிழித்து கட்டிய தொடைநடுங்கி திமுககாரனுங்க சவடால்.. ஆர்.எஸ்.பாரதி மீது எச்.ராஜா அட்டாக்!
சென்னை : 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட உடன் சலவைக்கு போட்ட வேட்டியை திரும்பப் பெற பயந்து, இருந்த வேட்டியையும் கரையை கிழித்து கட்டிய தொடை நடுங்கி திமுகவினர் இன்று சவடால் பேசுவது விந்தையாக உள்ளது என எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆளுநரையும், அண்ணாமலையையும் ஒருமையில் பேசிய ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி உண்டு என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி, சமீபத்தில் நெல்லையில் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ஐபிஎஸ் படித்துவிட்டு வந்த மெண்டல்கள் என ஆளுநர் மற்றும் அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார்.
ஆவேசமாக வார்த்தையைவிட்ட ஆர்.எஸ்.பாரதி.. ஆளுநர் மாளிகைக்கு பறந்த உளவு ரிப்போர்ட்.. ஆங்ரி மோடில் பாஜக!

நம் வரிப்பணம்
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநருக்கு சம்பளம் கொடுப்பது நாம். அவர் டீ குடிப்பது முதல் சலவைக்குப் போடுவது வரை நம் வரிப்பணம். அவர் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை தமிழக அரசின் வரிப்பணம் தான். நம்முடைய வரிப்பணத்தில் அமர்ந்திருக்கும் அவர், திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார். ராஜ் பவனில் கூட்டம் நடத்தி திராவிடம் என்பதே கிடையாது என பேசுகிறார்" எனச் சாடினார்.

மெண்டல்
மேலும், "ஆளுநரும் ஐபிஎஸ் படித்துவிட்டுத்தான் வந்துள்ளார். ஐ.பி.எஸ் படித்தவர்களில் பாதிப் பேர் இப்படி மென்டல் ஆகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரையும் சொல்லவில்லை. ஐபிஎஸ் படித்தால் வேலைக்கு சேருவார்கள். அந்த வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வரும் அதிகாரிகள் மென்ட்டலாகத்தான் இருப்பார்கள்" என்று கடுமையாகப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி.

பாஜக கண்டனம்
ஆளுநர் ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை மெண்டல்கள் என திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அவ்வப்போது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

தொடை நடுங்கி
"திமுகவில் மேலிருந்து கீழ் வரை படிக்காத மெண்டல் என்று சொல்ல வருகிறார் Road Side பாரதி. 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட உடன் சலவைக்கு போட்ட வேட்டியை திரும்பப் பெற பயந்த Road Side பாரதிகள், இருந்த வேட்டிலயும் கரையை கிழித்து கட்டிய தொடை நடுங்கி திமுக காரனுங்க இன்று சவடால் பேசுவது விந்தையாக உள்ளது. மேதகு ஆளுநரையும், அண்ணாமலையையும் ஒருமையில் பேசியதற்கு பதிலடி உண்டு." என எச்.ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.