கைமாறுது கணக்கு.. திமுகவில் இருந்து "தங்கம்" விலகுறாரா? ஓபிஎஸ் வீட்டில் நுழைந்த பிரபலம்.. அசந்த தேனி
சென்னை: மதுரையில் அதிமுக மாநாடு நடத்தவுள்ள நிலையில், ஒரு ஆச்சரிய சம்பவம் தேனியில் நடந்துள்ளது.. இதற்கு பின்னணி காரணங்கள் என்ன என்பது குறித்தும் அலசல்கள் எழுந்துள்ளன.
ஆண்டிப்பட்டி நீண்ட காலமாகவே அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. முக்குலத்தோர் வாக்குகள் மற்றும் படிக்காதவர்கள் அதிகம் என்பதால் இந்த தொகுதி மீது எம்ஜிஆர் தனிக் கவனம் செலுத்தினார்.
ஜெயலலிதா: டிடிவி தினகரன் மூலமாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மனதில் வெகு சீக்கிரமாகவே இடம் பிடித்தவர் தங்க.தமிழ்செல்வன்.. ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததன் விளைவு, அதிமுகவின் தேனி வேட்பாளர் மற்றும் எம்.பி..யாகவும் வளர்த்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அப்போது ஏற்பட்ட கெத்தும் மரியாதையும் இன்னமும் அரசியல் களத்தில் தங்கதமிழ்செல்வனுக்கு நீடித்தே வருகிறது. தேனி மாவட்ட அதிமுக அரசியல் என்றாலே, ஒருபக்கம் ஓபிஎஸ், இன்னொரு பக்கம் தங்க தமிழ்ச்செல்வன் என அதிரடியை கிளப்பினார்கள்.. ஒருகட்டத்தில், தினகரனின் இதயக்கனியாக ஓபிஎஸ் இருந்தவரை தங்க தமிழ்ச்செல்வன் ஓரம் கட்டப்பட்டிருந்தார்.
ஜாம்பவான்கள்: ஆனால் ஓபிஎஸ் எதிர் துருவமாக மாறிய அடுத்த விநாடியே, தினகரனின் புதிய இதயக்கனியாக மாறியவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆண்டிப்பட்டி தொகுதி தங்க தமிழ்செல்வனுக்கு என்றுமே நெருக்கமானது... அங்கு வலுவான ஜாம்பவான்களான ஆசையன் உள்ளிட்டோரை தாண்டி தனக்கென செல்வாக்கை உருவாக்கியதில் தங்க தமிழ்ச்செல்வனின் உழைப்பு அசாத்தியமானது...
அன்றும் சரி, இன்றும் சரி, ஆதரவாளர்களை பெருமளவு தன் பக்கமே இழுத்து வருவதில் ஓபிஎஸ்-ஐ விட முன்னணியில் நீடித்து வருவது தங்க.தமிழ்செல்வனாகவே உள்ளார்..
ஒரே தொகுதி: போடி என்றில்லை, ஓபிஎஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட போவது தங்க தமிழ்செல்வனாகத்தான் இருந்து வருகிறார்.. இருவருமே சமபலத்துடன் அன்று ஜெயலலிதா அவையை அலங்கரித்தவர்கள்.. இருவருக்குமே சாதி ஓட்டுக்கள் கை கொடுத்தன.. இருவருக்குமே தொகுதிக்குள் செல்வாக்கு இருக்கின்றன.
கடந்த முறை எம்பி தேர்தலின்போது, தங்கதமிழ்செல்வன் தன்னுடைய பிரச்சாரத்திலேயே, "ஓபிஎஸ் தொகுதியின் தெருக்களில் எல்லாம் பணம் இறைந்து கிடக்கிறது" என்று ஓபனாகவே சாடினார்.
செந்தில்பாலாஜி: அதிருப்தி காரணமாக, அமமுகவில் இருந்து, தங்க தமிழ்செல்வனை போல திமுகவுக்கு வந்தவர்தான் செந்தில்பாலாஜி.. இதில் செந்தில்பாலாஜி எடுத்ததுமே அமைச்சராகிவிட்டார்.. தங்கதமிழ்செல்வனை பொறுத்தவரை, திமுகவுக்கு விசுவாசமாக இருப்பவர்.. கடந்த முறை தேர்தலில் எப்படியும் இவர் வெற்றிபெற்றுவிடுவார் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அது மிஸ் ஆகிவிட்டது..
"சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாவட்ட தலைவர்களை தோற்கடித்தால், நிச்சயம் அமைச்சர் பதவி அல்லது முக்கிய பதவி உண்டு" என்று ஏற்கனவே திமுக மேலிடம் உறுதி தெரிவித்திருந்தது. தோல்வியை தழுவினாலும், ஓபிஎஸ்ஸுக்கு தேர்தல் களத்தில் இறுதிவரை நெருக்கடி தந்து கொண்டேயிருந்தார்.. எனவே, தங்கத்துக்கு விரைவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்றும் ஒரு பேச்சு இருந்து வந்தது.. ஆனால், எந்த பதவியும் தரப்படவில்லை.. ராஜ்யசபா சீட் தேடி வரலாம் என்கிறார்கள். அந்த பதவியும் தரப்படவில்லை.
அதிருப்திகள்: இதனால், தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகவும், திமுகவில் இருநது விலகப்போவதாகவும் செய்திகள் அவ்வப்போது கசிந்து வரும்.. ஆனால், அப்போதெல்லாம் உடனடியாக ஓடிவந்து மறுப்பு தெரிவித்து விடுவார் தங்க தமிழ்செல்வன். இதுவரை பெரிய அளவிலான பொறுப்பு, தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுக வழங்கவில்லை என்ற முணுமுணுப்பும், இருக்கத்தான் செய்கிறதாம்.
இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ் + தங்கதமிழ்ச்செல்வன் இருவரும் சந்தித்துள்ளனர்.. எதிரும் புதிருமாக இருந்தவர்களின் இந்த சந்திப்பு தென்மாவட்டங்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
போட்டோக்கள்: தேனியில் உள்ள பன்னீர்செல்வத்தை, அவருடைய வீட்டிற்கு சென்று நேரடியாக சந்தித்துள்ளார் தங்க தமிழ்செல்வன்.. தன்னுடைய இல்ல திருமண விழாவுக்கான அழைப்பிதழையும் தந்து முறைப்படி அழைத்துள்ளார்.. இந்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.. எனினும், இந்த சந்திப்புக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ? என்ற சந்தேகம் வலுக்க துவங்கிவிட்டது.

அன்று அமமுகவில் இருந்தபோது, "தங்கம்... தங்கம்.." என்று உச்சரிக்கப்பட்ட தினகரனின் இதயக்கனியாக திகழ்ந்த நிலையில், ஒருவேளை இப்போது மீண்டும் அமமுகவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் செல்கிறாரோ? என்று சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.
மற்றொருபக்கம், ஓபிஎஸ் + டிடிவி தினகரன் தரப்புக்கு மறைமுகமான ஆதரவை தருவதன்மூலம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒரு செக் வைக்கவே, இப்படியான முயற்சி நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.
திமுக மட்டுமே: ஆனால், இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.. ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.. ஒருகாலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள்.. இதன்காரணமாகவே, மூத்த தலைவர் என்ற முறையில் தங்க தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.. எப்படியோ, அரசியல் நாகரீகம் தேனியில் தென்பட்டுள்ளது, தென்மண்டல தொண்டர்களுக்கே மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. அத்துடன், எடப்பாடியின் அதிமுகவும் இதனை உற்றுநோக்கி கவனித்து வருகிறது.
அதுமட்டுமல்ல, திமுகவை விட்டு ஒருபோதும் தங்கம் எங்குமே தாவி செல்ல மாட்டார் என்றும் பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் மூத்த தலைவர் தங்க தமிழ்ச்செல்வத்தின் ஆதரவாளர்கள்...!!!












Click it and Unblock the Notifications