தாக்கப்பட்ட தமிழர்கள்! சுடப்பட்ட 16 பேர்! கர்நாடகாவில் நடந்த 1991 காவிரி கலவரம்! மறக்க முடியாத திக்
சென்னை: காவிரி மோதல் உச்சம் அடைந்துள்ள நிலையில் நாளை கர்நாடகாவில் பந்த் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த பந்த் காரணமாக 1991ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற காவிரி கலவரம் மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது.
தமிழ்நாடு கர்நாடக இடையே காவிரி பகிர்வு மோதல் மீண்டும் உச்சம் எடுத்துள்ளது. காவிரி டெல்டா குறுவை சாகுபடிகளைக் காப்பாற்ற காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் இதை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த முறை தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடவே முடியாது. கர்நாடகாவில் தண்ணீரே இல்லை, தமிழ்நாட்டிற்கு நாங்கள் எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறியது. ஆனால் விசாரணை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சென்ற நிலையில் வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் கர்நாடகா திறந்துவிடலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் கர்நாடக அரசு இதையும் ஏற்றுக்கொள்ளாமல் சொற்ப அளவு நீரை திறந்துவிட்டது. இதையடுத்து வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் கர்நாடக அமைப்புகள் கொதித்து போய் உள்ளன. நாளை இதை எதிர்த்து கர்நாடகாவில் விவசாய சங்கங்கள் போராட்டம் செய்ய உள்ளன. பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்றவை இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அச்சம்: இந்த போராட்டம் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முக்கியமாக பெங்களூர், மைசூரில் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. நாளை தமிழர்கள் தாக்கப்படுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. முக்கியமாக தமிழர்கள் நடத்தும் நிறுவனங்கள் பலவற்றில் தமிழ் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழர்கள் தாக்குதல்: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கர்நாடகாவில் தமிழர்கள் இடையே இந்த அச்சம் நிலவுவதற்கு, தமிழர்கள் தாக்கப்படலாம் என்ற பயம் நிலவுவதற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. இதற்கு முன் காவிரி போராட்டம் உச்சத்தில் இருந்த சமயங்களில் தமிழர்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த தாக்குதல்கள்தான் தற்போது நிலவும் அச்சத்திற்கு காரணம்.
1991 தாக்குதல்: முக்கியமாக 1991ல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காவிரி போராட்ட வரலாற்றில் கருப்பு புள்ளியாக பார்க்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் அம்மாநில தலைநகர் பெங்களூர் மற்றும் மைசூர் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அங்கே இருந்த தமிழர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
1991ல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் காவிரி நதிநீர் தீர்ப்பாயம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் போது இந்த வன்முறை வெடித்தது. இதன் விளைவாக, தமிழர்கள் பெங்களூர் மற்றும் பிற நகரங்களிலிருந்து அச்சத்துடன் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பலர் வேலை செய்யும் இடங்களில் இருந்து அவசர அவசரமாக சொந்த ஊருக்கு அல்லது வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டு மாநில அரசு புள்ளிவிபரங்களின்படி, அங்கு கலவரத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். கர்நாடகாவில் நடந்த மிகப்பெரிய காவிரி கலவரங்களில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது. சாலையில் தமிழர்களின் வாகனங்கள் கடுமையாக தாக்கப்பட்டன, அதேபோல் தமிழர்கள் பல இடங்களில் மோசமாக தாக்கப்பட்டு விரட்டப்பட்டனர்.
இதையடுத்து பெங்களூர், மைசூரில் 144 போடப்பட்டு மொத்தமாக முடக்கப்பட்டது. 2 நாட்களுக்கு மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. சென்னையிலும் ஆங்காங்கே கன்னடர்கள் இருக்கும் இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. காவிரி ஒட்டிய தமிழ்நாடு மாவட்டங்களில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன.
முக்கியமாக ஐடி நிறுவனங்கள் பல இதனால் இயங்க முடியாமல் அப்படியே முடங்கும் அவலம் ஏற்பட்டது. பேருந்து சேவைகள் மொத்தமாக தடைபட்டது. நாளை நடக்கும் போராட்டத்திலும் இது போல நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிலேயே அல்லது கர்நாடகாவிலோ காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையில் போராட்டம் வெடிக்கும் போதெல்லாம் 1991-ல் கர்நாடகாவில் நடந்த தமிழர் விரோத வன்முறையால் பாதிக்கப்பட்ட 16 பேர்தான் நினைவிற்கு வருவார்கள். அந்த அளவிற்கு காவிரியை சிவப்பாக்கிய கலவரம் அது. வெறும் 205 tmcft திறப்பதற்கு எதிராக நடந்த இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்ததும் இப்போது இரண்டு மாநில வரலாற்றில் பெரும் கருப்பு புள்ளியாக உள்ளது.
இது போன்ற அசம்பாவிதம் நாளை நடக்க கூடாது என்பதற்காக பெருமளவில் பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications