மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு.. அறநியைத்துறை நடவடிக்கை
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்பு உள்ள 2166 சதுர அடி நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் அந்த இடத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் என்று போர்டு வைத்துள்ளனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பிச்சுப்பிள்ளை தெருவில் சுமார் 2166 சதுர அடி மனை வேதாச்சலம் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த மனை கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. பல ஆண்டுகளாக வேதாச்சலம் தரப்பு வாடகை தரவில்லை.

நீதிமன்றம்
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை தெரிவித்தும் ரூ.8.50 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தவில்லை. எனவே அந்த இடத்தை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கடந்த 2012 ஆகஸ்ட் 27ம் தேதி நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து வாடகைதாரரின் வாரிசுதாரர் விஜயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தள்ளுபடி
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரிமிப்பை அகற்ற உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் விஜயன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் நீதிமன்றம் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

கபாலீஸ்வரர் கோயில்
இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அங்கிருந்து அகற்ற ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோயில் இணை ஆணையர் காவேரி தலைமையல் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து 2166 சதுர அடி மனையை மீட்டனர். இந்த மனையின் மதிப்பு ரூ,5 கோடி என கோயில் தரப்பு கூறியது.

சீல் வைத்த அதிகாரிகள்
முன்னதாக கடந்த ஜூலை மாதம் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் மயிலாப்பூர் கிளப்பில், கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த மதுபான பாருக்கு கோயில் நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. மேலும்ரூ.3 கோடி வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.












Click it and Unblock the Notifications