பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வருது.. பாய்ண்டை பிடித்த டிஆர்பி ராஜா
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வருவதாக திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார். சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்க பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ள டிஆர்பி ராஜா, ஆகஸ்ட் மாதத்தில் எழுதிய கடிதத்தை மூடி மறைந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் வசம் ஒப்படைக்க பிரதமார் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்தில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. அதன் வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உட்கட்டமைப்பும், நிர்வாகமும் முக்கியமானவை.

பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும். தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டிற்கு அதற்கேற்ற சிறப்பு விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர் - நிர்வாகமான இந்திய விமான நிலைய ஆணையத்தை மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கடிதம் அடிப்படையில், விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதன் தொடர்ச்சியாக, இப்படியொரு கடிதம் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. தமிழக மக்களுக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்க பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாம் தவெக அரசு.
இரட்டை ஓடுபாதைகள், சரக்கு முனையம், MRO வசதிகள், எதிர்கால விரிவாக்கத்திற்கான நிலப்பரப்புடன் நமது தமிழக அரசுக்கு சொந்தமான TIDCO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உருவாக இருந்த பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தது, மீனம்பாக்கம் சென்னை விமான நிலையத்தைக் கைப்பற்றப் போகும் தனியார் நிறுவனத்தின் வருங்கால வருமானத்தையும் ஏகபோக லாபத்தையும் பாதுகாக்கவா?
அந்தக் கடிதத்தை மூடி மறைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கடிதத்தை முதல்வர் விஜய் ஆகஸ்ட் மாதத்திலேயே எழுதி இருக்கிறார். ஆனால் செப்டம்பர் மாதம் 3வது வாரமாகியும் இதுதொடர்பாக தமிழக அரசு அமைதி காத்திருக்கிறது. இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
