“அம்மா உணவகங்கள்” வேற லெவலா மாறப்போகுது.. புத்துயிர் ஊட்டும் சென்னை மாநகராட்சி! மக்கள் ஹேப்பி!
சென்னை: அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ரூ.5 கோடி செலவில் அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அம்மா உணவகம். மிகக் குறைவான விலையில் ஏழை எளிய மக்களின் பசி, அம்மா உணவகத்தால் தீர்க்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல நகரங்களுக்கு அம்மா உணவகம் திட்டம் விரிவு செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா உணவகங்கள் கடந்த 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் திறக்கப்பட்டன. தற்போது 399 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ரூ.5, 2 சப்பாத்தி ரூ.3 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதிமுக ஆட்சியிலும், கொரோனா, புயல், வெள்ளம் காலகட்டத்திலும் அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தன. அதிமுக ஆட்சிக்குப் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.
அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனினும், அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் இது நாள்வரை பராமரிப்பு செய்யாமல் பாழடைந்து கிடக்கிறது. பல கட்டிடங்களின் உள் பகுதியில் சமையல் ஆவி, எண்ணெய் படிந்து சுவர்கள் மிகவும் அசுத்தமாக உள்ளன. பல இடங்களில் வெளிச்சமின்றி, போதிய மின் விளக்குகள் இல்லாமலும் உள்ளன.
மேலும், பொதுமக்கள் உண்பதற்கான மேசைகளின் கால்கள்உடைந்துள்ளன. இதனால் அங்கு உணவு அருந்த வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பெரும்பாலான அம்மா உணவகங்களில் முன்பு போல அதிகளவில் உணவுகள் விற்பனையாவது இல்லை.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு, அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டிடங்களில் உள்ள விரிசல்களை சரி செய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவுநீர் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மேலும் 2013-ல் அம்மா உணவகங்களுக்காக வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சி போன்றவை பழுதாகி கிடக்கும் நிலையில் அவற்றுக்கு பதிலாக புதியதாக வாங்கவும் திடடமிட்டுள்ளது. சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்றாலும், மக்கள் பசியை ஆற்றி வரவேற்பைப் பெற்ற திட்டம் என்பதால், திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் புத்துயிர் பெற இருக்கின்றன. சென்னை மாநகராட்சியின் இம்முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற பகுதிகளிலும், அம்மா உணவகங்கள் விரைவில் பழுது பார்க்கப்பட்டு புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications