"தலப்பாகட்டி பிரியாணி.." இனிமேல் பெயரை பயன்படுத்த கூடாது! பிரபல ஹோட்டலுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தின் தலப்பாக்கட்டி பிரியாணி தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஒரு உணவு வகையாகும்.
இந்த நிலையில், தலப்பாக்கட்டி என்கிற பெயரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற உணவகம் பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்பூர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பிரியாணி செய்யப்பட்டாலும் இது வட மாவட்ட/மாநில பாணியில் செய்யப்படும் பிரியாணி வகையாகும். எனவே தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற தனித்த மசாலாக்களை கொண்டு இந்த தலப்பாக்கட்டு பிரியாணி தயாரிக்கப்படுகிறது. எனவே இதற்கு எப்போதும் தனி மவுசு உண்டு.
1957ல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆனந்த விலாஸ் என்கிற பெயரில் நாகசாமி நாயுடு ஒரு உணவகத்தை தொடங்கினார். இதன் தரம் வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்ந்தது. இந்நிலையில் வேகமாக இது வளர்ந்தது. பின்னர் கடந்த 2013ல் இது திண்டுக்கல் பிரியாணியாக மாற்றம் செய்யப்பட்டது.

தலப்பாகட்டி பிரியாணி கடைகள்
இந்த உணவகத்தில் தென்னிந்திய மசாலாக்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவகத்திற்கு தற்போது சென்னையில் 28 இடங்களில் கிளைகள் உள்ளன. அதேபோல 12க்கும் அதிகமாக இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒரு கிளை உள்ளது.

நீதிமன்றம்
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உம்மாச்சி தரவாடு பிரியாணி உணவகம் தனது பெயரில் தலப்பாக்கட்டி என்பதை இணைத்துக்கொண்டது. இது உணவக உரிமையாளர்கள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த தலப்பாக்கட்டி பெயரை நீக்க வேண்டும் என திண்டுக்கல் தலப்பாக்கட்டி உணவகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திருவனந்தபுரம் உணவகம் பெயரை மாற்றவில்லை. இதனையடுத்து திண்டுக்கல் தலப்பாக்கட்டி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.

பதிவு பெற்ற பெயர்
தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் என்ற பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, அதே பெயரில் மற்ற ஹோட்டல்களைத் திறப்பது பதிப்புரிமை மீறல் என்று திண்டுக்கல் தலப்பாக்கட்டி உணவகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவை பிறப்பித்தனர்.

தலப்பாகட்டி பெயரை நீக்க உத்தரவு
இதன்படி, திருவனந்தபுரம் உணவகம் தனது உணவகத்தின் பெயரிலிருந்து தலப்பாக்கட்டியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த தடை தொடர்பான நோட்டீசுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பதில் அளிக்க திருவனந்தபுரம் உம்மச்சி தரவாடு உணவகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications