மொத்தமாக முடங்கும் சென்னை.. ரோடு கூட போடுவது இல்லை.. ஸ்தம்பித்த முக்கிய திட்டங்கள்.. போச்சு!
சென்னை: தவெக அரசின் டெண்டர் ரத்து நடவடிக்கைகளுக்கு இடையே, மாநிலத்தின் பல்வேறு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான டெண்டர்கள் முழுமையாக முடங்கிப்போயுள்ளன. பழைய திட்டங்களின் மறுஆய்வு, நிதி பற்றாக்குறை மற்றும் புதிய டெண்டர் விதிகளில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் காரணமாக முக்கிய துறைகள் புதிய டெண்டர்களை வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றன.
இதனால், எதிர்வரும் பருவமழை காலத்திற்கு முன்னதாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தும், மழைநீர் வடிகால்கள் இணைக்கப்படாமலும், கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் இருக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.

ஸ்தம்பித்த மாநில நெடுஞ்சாலைத் துறை
நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சாலைகள் அமைத்தல் மற்றும் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் தன்ஷா அமைப்பு, புதிய அரசு அமைந்ததிலிருந்து எந்தவொரு பெரிய திட்டத்திற்குமான டெண்டரையும் வெளியிடவில்லை. சிறு பழுதுபார்ப்பு மற்றும் ஒட்டுவேலைகளுக்கு மட்டுமே டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, ஆற்காடு சாலை, வேளச்சேரி - தாம்பரம் முதன்மைச் சாலை மற்றும் கோயம்பேடுக்கு அப்பால் உள்ள பூந்தமல்லி உயர் சாலை ஆகிய முக்கிய போக்குவரத்து பாதைகள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளன. மேலும், வடபழனி நூறு அடி சாலை மற்றும் கோயம்பேடு பூந்தமல்லி உயர் சாலையில் உள்ள பல மழைநீர் வடிகால்கள் பாதியிலேயே திறந்தவெளியாக விடப்பட்டுள்ளன.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, முந்தைய அரசின் சுமார் 40 முக்கிய திட்டங்கள் தற்போது தீவிர ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், நில எடுப்பு சிக்கல்களைத் தீர்க்கவும் புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், சாலைகளின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த புதிய விதிகளுடன் கூடிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதிளித்துள்ளார்.
தொடரும் அவதி
சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகளான நெல்சன் மாணிக்கம் சாலை சுரங்கப்பாதை உட்பட பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மதுரவாயல், அம்பத்தூர், போரூர் மற்றும் வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் சாலைகள் பெரிய அளவிலான பள்ளங்களுடன் காட்சி அளிக்கின்றன.
நகரம் முழுவதும் சுமார் 100 கி.மீ தூரத்திற்கான மழைநீர் வடிகால் இணைப்புகள் இன்னும் முழுமைபெறாமல் விடுபட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட 232 டெண்டர்களில் பெரும்பாலானவை சிறிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகளுக்கானவை மட்டுமே.
நிதி நெருக்கடியில் மாநகராட்சி மற்றும் 'சிஎம்டிஏ'
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துற அதிகாரி ஒருவர் கூறுகையில், "முந்தைய ஆட்சியில் முறையான நிதி ஒதுக்கீடு இன்றி பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால், அவை முடங்கியுள்ளன. இனிவரும் திட்டங்கள் அனைத்தும் முறையான நிதி ஒப்புதலுடன் மட்டுமே செயல்படுத்தப்படும். ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பணிகள் வேகம் பெறும்" என்றார்.
அதேபோல், வட சென்னை வளர்ச்சித் திட்டம் உட்பட ₹4,500 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்ட சென்னை பெருநகர வளர்ச்சி முகமையும தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக புதிய திட்டங்களைத் தவிர்க்கிறது. Tasmac நிறுவனத்திலும் பார்கள் மேலாண்மைக்கான டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உடனடி கவனம் தேவைப்படும் அம்சங்கள்.
தற்போதுள்ள சூழலில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், உடனடியாக 500-க்கும் மேற்பட்ட சாலைகளை புதிதாக அமைக்க வேண்டியுள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்குள் விடுபட்ட 115 மழைநீர் வடிகால் இணைப்புகளைச் சரிசெய்ய வேண்டும்.
வெள்ளப் பெருக்கைத் தடுக்க 30-க்கும் மேற்பட்ட முக்கியக் கால்வாய்களை உடனடியாகத் தூர்வார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த மறுஆய்வு நடவடிக்கைகள் விரைந்து முடிந்து, உள்கட்டமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டால் மட்டுமே வரவிருக்கும் மழைக்காலத்தில் சென்னை மக்கள் பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.


Click it and Unblock the Notifications
