சென்னையில் 84% வாக்குப்பதிவு.. ஆர்.கே.நகரில் அதிகபட்சம்.. 16 தொகுதி வாரியாக லிஸ்ட்!
சென்னை: சென்னையில் அதிகபட்சமாக ஆர்.கே.நகர் தொகுதியில் 90.60% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூர் தொகுதியில் 74.89% வாக்குகளும் பதிவாகியுள்ளன. சென்னையின் 16 தொகுதிகளை சேர்த்து மொத்தம் 83.74% வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 சட்டசபை தேர்தலில் 59.06% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம்
சென்னை மாவட்ட தொகுதிகளில் மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். அவா்களில் ஆண்கள் 13,95,716 பேர். பெண்கள் 14,96,921 பேர். இதர வாக்காளா்கள் 868 போ் உள்ளனர். இதற்காக 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் 298 பேர் சுயேச்சைகள்.
சென்னையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 83.73 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை
சென்னையில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி 3 இடங்களில் எண்ணப்படுகின்றன. அதன்படி, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க. நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
லயோலா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய தொகுதிகளுக்கு உரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டு செல்லப்பட்டன.
சென்னையில் 83.74% வாக்குப்பதிவு
வரும் மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவல்துறை, துணை ராணுவப் படையினர் மூலம் 24 மணி நேர பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 83.74 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 86 சதவீதமும், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 90 சதவீத வாக்குகளும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் 84.34 சதவீத வாக்குகளும் பதிவாகின.
கடந்த தேர்தலை விட குறைவா?
சென்னை மாவட்டத்தில் 2016, 2021 தேர்தல்களை விட அதிகமாக 83.7% வாக்குகள் பதிவானாலும், எண்ணிக்கை அடிப்படையில் கடந்த இரு தேர்தல்களை விட குறைவான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 24.16 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது, 23.69 லட்சம் வாக்குகளே பதிவாகி உள்ளன. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பிறகு சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தில் இருந்து 28 லட்சமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், 4 தொகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை - வாக்கு சதவீதம் தொகுதி வாரியாக
1. ஆர்கே நகர் தொகுதி - 90.60 சதவீதம்
2. பெரம்பூர் - 89.73 சதவீதம்
3. கொளத்தூர் - 86.11 சதவீதம்
4. வில்லிவாக்கம் - 86 சதவீதம்
5. திருவிக நகர் - 76.09 சதவீதம்
6. எழும்பூர் - 85.55 சதவீதம்
7. ராயபுரம் - 76.73 சதவீதம்
8. துறைமுகம் - 82.75 சதவீதம்
9. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 84.34 சதவீதம்
10. ஆயிரம் விளக்கு - 83.09 சதவீதம்
11. அண்ணா நகர் - 85.65 சதவீதம்
12. விருகம்பாக்கம் - 85.50 சதவீதம்
13. சைதாப்பேட்டை - 77.85 சதவீதம்
14.தி.நகர் - 83.55 சதவீதம்
15.மயிலாப்பூர் - 74.89 சதவீதம்
16. வேளச்சேரி - 84.50 சதவீதம்













Click it and Unblock the Notifications