சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து.. சரசரவென குறைந்த நிலத்தடி நீர்! மக்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!
சென்னை: சென்னையில் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், நகரின் பிரதான குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நீர் இருப்பு பெருமளவு குறைந்துள்ளதால், வரும் மாதங்களில் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏரிகளில் பாதிக்கு மேல் குறைந்த நீர் இருப்பு
சென்னை நகர மக்களின் தாகத்தைத் தீர்க்கும் முக்கிய நீர்நிலைகளான புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் கடலூரில் உள்ள வீராணம் ஏரி ஆகியவற்றின் மொத்த கொள்ளளவு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 5,473 மில்லியன் கன அடியாக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் இந்த ஆறு நீர்நிலைகளிலும் சேர்த்து 8,202 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட தற்போது 2,730 மில்லியன் கன அடி நீர் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை மாநகரின் மாதாந்திர குடிநீர் தேவை தோராயமாக 1 டி.எம்.சி என்ற அளவில் உள்ள நிலையில், தற்போதைய நீர் இருப்பு அடுத்த நான்கு மாத தேவையை மட்டுமே சமாளிக்க போதுமானது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மழை ஏமாற்றம்
வழக்கமாக மே மாத இறுதியில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு வெப்பத்தின் தாக்கம் குறைந்து, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓரளவு நல்ல மழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் வழக்கமான மழை பெய்யாமல் ஏமாற்றியுள்ளது.
இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இந்த ஆண்டு நீடித்த கடுமையான வெப்ப அலையால் மக்களின் தினசரி குடிநீர் பயன்பாடு வழக்கத்தை விட கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக, ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாக சரிந்துவிட்டது. தற்போது மழைப் பொழிவு என்பது பரவலாக இல்லாமல், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குறுகிய நேரத்தில் தீவிரமாக பெய்யும் இயல்பைப் பெற்றுள்ளது. எனவே, மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுத்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாகப் பராமரிப்பது காலத்தின் கட்டாயம்" என எச்சரித்துள்ளனர்.
காய்ந்துபோன ஆழ்துளைக் கிணறுகள்
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது கள நிலவரத்தில் தெளிவாகத் தெரிகிறது. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் முற்றிலுமாக வறண்டுபோயுள்ளன. இதனால் பொதுமக்கள் புதிய ஆழ்துளைக் கிணறுகளை மிக அதிக ஆழத்தில் அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக இருந்த பழைய ஆழ்துளைக் கிணறு திடீரென வறண்டுவிட்டது. வேறு வழியின்றி புதிதாக 1,000 அடி ஆழம் வரை தோண்டினோம். ஆனால், அவ்வளவு ஆழத்திற்குச் சென்றும் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்கவில்லை என்று மக்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் விநியோகத்தை அதிகரித்த மெட்ரோ வாட்டர்
பொதுமக்களின் குடிநீர் தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய சென்னை குடிநீர் வாரியம்போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நகருக்கு வழங்கப்படும் தினசரி குழாய் வழி குடிநீர் விநியோகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,171 மில்லியன் லிட்டராக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1,246 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு 75 MLD கூடுதல் விநியோகமாகும்.
நெம்மேலியில் உள்ள 110 MLD திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் உற்பத்தித் திறனும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 75 MLD ஆக இருந்த உற்பத்தி, தற்போது 93 MLD ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு மெட்ரோ வாட்டர் நிலையங்கள் மூலம் லாரிகள் வழியாக பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஏரிகளில் நீர்மட்டம் குறைவாக இருந்தாலும், விரைவில் தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவமழை கைகொடுக்கும் என்றும், அதன் மூலம் ஏரிகள் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், பருவமழை தொடங்கும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
