தேவர் ஜெயந்தி நாளன்று.. பசும்பொன் அல்ல.. நந்தனத்தில் மரியாதை செலுத்தும் முதல்வர் விஜய்
சென்னை: அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி நாளன்று முதல்வர் விஜய் நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக முதல்வர் விஜய் பசும்பொன் வர வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியான சூழலில், அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி அந்த சமூக மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும். தென் மாவட்டங்களில் இருந்து சாரை சாரையாக வேன் மற்றும் கார்களில் லட்சக்கணக்கானோர் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுவர்.

அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் வருவார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுவரை விஜய் எந்தவொரு தலைவரின் சிலைக்கோ, நினைவிடத்திற்கோ நேரில் சென்று மரியாதை செலுத்தியதில்லை. இதனால் விஜய் பசும்பொன் வந்தால், அது சில விமர்சனங்களை பெறும் என்று பார்க்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இம்மானுவேல் சேகரனார் ஜெயந்திக்கு நேரில் வராத விஜய், தேவர் ஜெயந்திக்கு மட்டும் வந்தால், தவெகவின் முக்கிய வாக்கு வங்கியான தலித் வாக்கு வங்கி அடி வாங்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து வருவதால், விஜய் அங்கு செல்வது சரியாக இருக்காது என்று தொடக்கம் முதலே உயர் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதாக தெரிய வந்தது.
இருப்பினும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தரப்பில் விஜய்யை பசும்பொன் அழைத்து வந்துவிட வேண்டும் என்று தீவிரமாக காய் நகர்த்தினர். ஆனால் விஜய் பசும்பொன் வரவில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார். இருப்பினும் அக்டோபர் 30ஆம் தேதியன்று நந்தனத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு விஜய் மரியாதை செலுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியாக முக்குலத்தோர் சமூக மக்கள் இருந்து வந்தனர். தற்போது முக்குலத்தோர் சமூக மக்கள் திமுக மற்றும் பாஜகவில் இணைந்து வரும் சூழலில், அந்த சமூக ஆதரவை கைப்பற்ற விஜய் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அது பலன் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
