சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய பத்திரிகையாளர் தினம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், சீமான் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    தேசிய பத்திரிகை தினம்.. பத்திரிகையாளர்களின் பணியை போற்றுவோம்..! - வீடியோ

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்து செய்தி: ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிகைத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் திங்கள் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜெயலலிதாவின் அரசு, பத்திரிகையாளர்களின் நலனை காக்கும் வகையில், பத்திரிகை துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக 10,000 ரூபாய் மற்றும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக 5,000 ரூபாய் வழங்குவது, பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைக்கான நிதியுதவியை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது. பணிக்காலத்தில் காலமான பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவித் தொகையை உயர்த்தி வழங்கியது.

     பத்திரிகையாளர் குடியிருப்புகள்

    பத்திரிகையாளர் குடியிருப்புகள்

    பத்திரிகைத்துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் குறைந்த வாடகையில் வீடுகளை ஒதுக்கீடு செய்வது, மாவட்டங்களில் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்குவது, அரசு அங்கீகார அட்டைகள் பெற்றுள்ள பத்திரிகையாளர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்களை பத்திரிகையாளர்களின் நல்வாழ்விற்காக சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைப்பதோடு, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட ஜெயலலிதாவின் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசிற்கும் பாலமாக விளங்கும் பத்திரிகைத் துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது தேசிய பத்திரிகை தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

     ஜனநாயகத்தின் 4-வது தூண்

    ஜனநாயகத்தின் 4-வது தூண்

    திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி: "காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான்! ஊரினைக் காட்ட இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே!" - என்று பத்திரிகைகளைப் போற்றினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இருள் நீக்கி ஒளி தருதல் மட்டுமல்ல, அந்த ஒளியை பேதம் இல்லாமல் வழங்கும் துறை தான் பத்திரிக்கைத் துறை. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பத்திரிகைத் துறை சொல்லப்படுகிறது.

     சமரசங்களுக்கு இடம் இல்லாத நிலை

    சமரசங்களுக்கு இடம் இல்லாத நிலை

    பலநேரங்களில் மொத்த ஜனநாயகத்தையும் காக்கும் பெரும் பொறுப்பும் பத்திரிகைத் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும்தான் இருக்கிறது. மக்களுக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் பெருங்கடமை பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அத்தகைய பத்திரிகையாளர் தினமாக இந்திய அளவில் நவம்பர் 16 ஆம் நாள், ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட இந்த நாளை, 1996 ஆம் ஆண்டு முதல் தேசியப் பத்திரிகையாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஜனநாயகம் - சமத்துவம் - சமூகநீதி - மதநல்லிணக்கம் - ஏழை நடுத்தர வர்க்க மக்கள் நலன் - ஆகியவை எதேச்சதிகார மனம் கொண்டவர்களால் எள்ளிநகையாடப்படும் இந்தச் சூழலில் இவற்றுக்காகப் போராட,வாதாட, எழுத, எழுதியபடி நிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அதனை எந்த சமரசங்களுக்கும் இடமளிக்காத வகையில் பத்திரிகையாளர்கள் காக்க வேண்டும் என்று இந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்.

     உங்களில் உலக வாழ்வு

    உங்களில் உலக வாழ்வு

    உங்கள் வாழ்வில் உலக வாழ்வு அடங்கி இருக்கிறது. உங்களது வெற்றியில் உலக வெற்றி உள்ளடங்கி இருக்கிறது. எனவே, உங்களது வாழ்க்கையே பொதுவாழ்க்கைதான். அத்தகைய பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்தான்! பத்திரிகையாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவன ஊழியர்கள், அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

     சீமான் வாழ்த்து

    சீமான் வாழ்த்து

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட வாழ்த்து செய்தி: மக்களாட்சியின் மாண்பினை தாங்கிப்பிடிக்கும் நான்கு தூண்களில் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் விளங்குகின்ற ஊடகத் துறையில் அறவுணர்வோடும், அர்ப்பணிப்புணர்வோடும், பணிபுரியும் அச்சு மற்றும் மின் ஊடகத் துறையினருக்கு ஊடக நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் அடிப்படை உரிமைக்கும், மக்களாட்சியின் அரசியலமைப்பு முறைக்கும் பேராபத்து விளையும் போதெல்லாம் அறத்திலிருந்து நழுவாது நடுநிலையோடு அநீதிக்கும், அதிகார கொடுங்கோன்மைக்கும் எதிராக உள்ளது உள்ளபடி உண்மைகளை வெளிச்சமிடும் எளிய மக்களுக்கான பெருங்குரலாய் ஓயாது ஒலிக்க வேண்டியது ஊடகங்களது முழுமுதற் கடமையாகும்.

     அறம் சார் பத்திரிகையாளர்கள்

    அறம் சார் பத்திரிகையாளர்கள்

    அந்த வகையில், இயற்கைப்பேரிடர்களின்போதும், எதிர்பாராத விபத்துகளின் போதும் தன்னலம் கருதாது, இரவுப்பகல் பாராது செய்திகளைக் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களின் பணியென்பது போற்றுதலுக்கும், வணக்கத்திற்குமுரியதாகும். அதுவும், இந்திய ஒன்றியத்தின் சனநாயக முறைக்கே பேராபத்து உருவாகி இருக்கும் தற்காலத்தில் அறம் சார்ந்து நிற்கும் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களின் தேவையென்பது முன்னில்லாத வகையில் பெருமளவு அதிகரித்துள்ளது. அப்படி நேர்மையோடு செயல்படும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு அவர்களின் பணியைப் பறிப்பதும் தொடர்ந்து அதிகரிப்பது கவலை தருவதாக உள்ளது. இருந்தபோதிலும், தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்படும் இழப்புகளையும், வலிகளையும் தாண்டி , அரசியலமைப்பு மன்றங்களும், ஆணையங்களும், அதிகார இயந்திரமும், நீதிமன்றங்களும்கூட வழிதவறி நடக்கும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எளிய மக்களின் பக்கம் நிற்கும் ஊடகத்துறையினர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் அறப்பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

     கொடுங்கோன்மைக்கு எதிராக

    கொடுங்கோன்மைக்கு எதிராக

    அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும்! ஊடக அறம் வெல்லட்டும்!! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    English summary
    Tamilnadu CM Edappadi Palaniswami, DMK President MK Stalin, Naam Tamilar Chief Seeman had wished ahead of National Journalism Day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X