என்னதான் பிளைட்டில் வந்தாலும்.. சோர்வே இருக்காதா? பெருங்குடி, வேளச்சேரினு பம்பரமாக சுழலும் முதல்வர்
சென்னை: இன்று அதிகாலை 3 மணிக்கு துபாயில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் ஓய்வில்லாமல் அடுத்தடுத்து பணிகளை மேற்கொண்டு வருவது கட்சியினரையும் அவரது குடும்பத்தினரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு 69 வயதாகிறது. ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்த்தால் இத்தனை வயதா என வியக்க வைக்கிறது. அண்மையில் முதல்வர் ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த புத்தக வெளியிடுவதற்கு முன்னர் முதல்வர் ஸ்டாலினின் வயது குறித்து தனது தாய் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் விவாதம் நடத்தியதாக ராகுல் காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் கூறுகையில், எனது தாயிடம் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன வயது இருக்கும் என கேட்டேன். அதற்கு அவர் என்ன 60 இருக்கும் என்றார். ஆனால் நானோ 69 என்றேன், அவர் என்னை நம்பாமல் கூகுளில் செக் செய்தார். பின்னர் ஆச்சரியத்துடன் அவரது வயதை ஒப்புக் கொண்டார் என ராகுல் கூறியிருந்தார்.

பிட்னஸ் புத்தகம்
மேலும் ராகுல் கூறுகையில் முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் புத்தகத்தை எழுதியது போல் பிட்டாக இருப்பது எப்படி என்ற புத்தகத்தையும் அவர் எழுத வேண்டும் என கேட்டுக் கொண்டார். அது போல் நிகழ்ச்சிகள் நிமித்தமாக வெளியூர் செல்லும் முதல்வர் ஸ்டாலினை நேரில் பார்க்கும் மக்களும் அவரது வயதுக்கு மீறிய அவரது சுறுசுறுப்பான செயல்பாடுகளை கண்டு வியக்கிறார்கள்.

சைக்கிள் பயிற்சி
முதல்வர் ஸ்டாலின் நீண்ட காலமாக சைக்கிளிங், வாக்கிங் எல்லாம் சென்றார். பின்னர் முதல்வரானவுடன் தன்னால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக உடற்பயிற்சியை வீட்டுக்குள்ளேயே செய்து வருகிறார். இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ அவ்வப்போது வெளியாகும்.

இரு முறை சைக்கிள் பயிற்சி
இந்த வயதில் இத்தனை கடுமையான உடற்பயிற்சிகளை இவர் செய்கிறாரா என ஆச்சரியப்பட வைக்கிறது. அது போல் மாதத்தில் இரு முறையாவது ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் தனக்கு வரும் புகார்களை அமைச்சர்களுக்கு பார்வேர்டு செய்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

4 நாட்கள் பயணம்
இந்த நிலையில் தமிழகத்தில் தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் ரூ 6100 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார். அதிகாலையில் வந்தாலும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

ஓய்வு
அதன்பிறகு வீட்டுக்குச் சென்ற அவர் ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ வந்ததும் வராததுமாக பெருங்குடியில் அமேசான் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவை தொடங்கி வைக்க சென்றுவிட்டார். அதன் பிறகு வேளச்சேரியில் மழை வெள்ளத் தடுப்பு வடிகால் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டார்.

பிளைட்
என்னதான் பிளைட்டில் வந்தாலும் அந்த வயதிற்கேற்ப சோர்வு என்பதே இல்லாமல் பம்பரம் போல் முதல்வர் ஸ்டாலின் சுற்றி வருவது பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. வேளச்சேரி திட்டத்திற்கு முதல்வர் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால், சென்னையில் மழை வெள்ளம் என்றால் அதிகம் பாதிக்கப்படுவது வேளச்சேரி பகுதியும் வடசென்னை பகுதியும்தான்.

வடகிழக்கு பருவமழை
இந்த முறை வடகிழக்கு பருவமழையின் போது வேளச்சேரி மக்களும் வடசென்னை மக்களும் பாதிக்கப்படாத வண்ணம் இந்த மழைநீர் வடிகால் பணிகளை துரித கதியில் முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இனி சென்னையில் அடைமழை பெய்தாலும் வேளச்சேரியில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications