விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி.. இபிஎஸ் சொன்ன வார்த்தையை சொல்லட்டுமா? ஆஃப் செய்த ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் குரலாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையிலேயே பதிலடி கொடுத்தார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசுகையில், ஒரே இரவில் 39 சடலங்களுக்கு உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) எவ்வாறு நடத்தப்பட்டது என்றும், ஏன் இவ்வளவு அவசரம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் சென்று கள்ளச்சாராயத்தில் பலியான நபர்களின் குடும்பங்களை பார்க்காத ஸ்டாலின்.. இங்கு மட்டும் ஏன் சென்றார். அமைச்சர்கள் அங்கு செல்லாத போது இங்கு மட்டும் அமைச்சர்கள் செல்வது ஏன்?
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என்பது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும். விஜயின் பிரச்சாரம் கரூருக்கு முன்பு நான்கு மாவட்டங்களில் நடைபெற்றது. அக்கூட்டங்களில் திரண்ட மக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு ஒரு தகவலைக் கொடுத்திருக்கும்.
அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்காது. போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அதே பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது., என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் பதிலடி
இதற்கு முதல்வர் ஸ்டாலின் தந்த பதிலடியில், கள்ளக்குறிச்சியில் பலியானவர்கள் பொறுப்பற்ற தனத்தால்.. சொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதால் பலியானார்கள். கள்ளக்குறிச்சி பற்றி பேசும் கே பழனிச்சாமி.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நேரில் சென்றாரா? அந்த சம்பவம் நடந்த போது நீங்கள் சொன்ன வார்த்தையை நான் இங்கே சொல்லட்டுமா?
கரூரில் செப்.27 ஆம் தேதி தவெக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்புக் காரணங்களாலும் அனுமதி வழங்கவில்லை. லைட் ஹவுஸ் கார்னர் / உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவுக்கும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை.
கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் நெரிசலுக்கு காரணம். கட்டுப்பாடுகளை மீறும் போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும். வழக்கமான அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட கரூர் தவெக பரப்புரையில் கூடுதலாகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவலர்கள், அதிகாரிகள் என அன்று மொத்தம் 606 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
கரூர் தவெக பரப்புரை நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு அரசே காப்பாற்றியது. நான் எனது 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications