கூட்டணியில் இருந்துகிட்டு.. இப்படிலாம் பண்ண கூடாது! உச்சக்கட்ட கடுப்பில் விஜய்! என்ன நடந்தது?
சென்னை: ஆளும் தவெக கட்சியின் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து பொதுவெளியில் அரசு மீதும் தலைமை மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருவது, முதலவர் விஜய்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். வழக்கமாக மூடிய கதவுகளுக்குள் பேசப்பட வேண்டிய கருத்து வேறுபாடுகள், இப்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக விவாதிக்கப்படுவது ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்குவதாக பனையூர் வட்டாரங்கள் கருதுகிறதாம்.
பொதுவெளியில் வெடித்த விமர்சனங்கள்
சமீபகாலமாக, தவெக கூட்டணிக் கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் விஜய் அரசின் சில கொள்கை முடிவுகள் குறித்து பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 'கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும்' என்று ஒருபுறம் பேசப்பட்டாலும், மறுபுறம் அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து பனையூரில் உள்ள முக்கிய மேலிட நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, "கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது கோரிக்கைகள் அல்லது கருத்துகளை நேரடியாகத் தெரிவிக்கலாம். அதை விடுத்து, ஊடகங்கள் முன் நின்று அரசுக்கு எதிராகப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது எதிர்க்கட்சிகளுக்குத் தான் சாதகமாக முடியும்" என்று விஜய் தனது அதிருப்தியை மிகக் காரசாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பின்னணியில் திமுகவின் 'ஸ்கெட்ச்'? பனையூர் முகாமில் எழும் சந்தேகம்
கூட்டணிக் கட்சிகள் திடீரென இவ்வளவு காரசாரமாக இறங்கி அடிப்பதற்கு பின்னணியில் எதிர்க்கட்சியான திமுக இருக்கலாம் என்ற பலமான சந்தேகம் பனையூர் முகாமில் உலா வருகிறது. ஆட்சிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தி, அரசியல் குழப்பத்தை உருவாக்க திமுக திரைமறைவில் காய்நகர்த்துகிறதோ என்ற கோணத்தில் ஆளுங்கட்சியின் உளவுப் பிரிவும், மேலிடக் குழுவும் ஆராய்ந்து வருகின்றன.
கூட்டணித் தலைவர்களை தூண்டிவிட்டு, ஊடக வெளிச்சத்தில் அரசைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் வியூகத்தை திமுக கையில் எடுத்துள்ளதாக விஜய் ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர். எதிர்க்கட்சியின் இந்த மறைமுக அழுத்தத்திற்கு கூட்டணிக் கட்சிகள் பலியாகிவிடக் கூடாது என்பதில் விஜய் மிகத் தீவிரமாக இருக்கிறார்.
7 தொகுதி இடைத்தேர்தல் கணக்கு: புதிய அரசியல் சமன்பாடு!
இந்த அரசியல் புயலுக்கு மத்தியில், விரைவில் வரவிருக்கும் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தவெக முகாமிற்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த 7 தொகுதிகளிலும் தனித்து அல்லது முழு பலத்துடன் களமிறங்கி கிளீன் ஸ்வீப் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி உறுதியான திட்டமிடலை வகுத்து வருகிறது.
இந்த 7 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுவிட்டால், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் தனிப்பட்ட பலம் கணிசமாக அதிகரிக்கும். அதன் மூலம், மற்ற கூட்டணிக் கட்சிகளின் தேவையற்ற நிர்பந்தங்களுக்கும், பகிரங்க விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மேலிடம் கணக்குப் போடுகிறது.
இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, விசிக இல்லாமல்.. பாமக (PMK) மற்றும் காங்கிரஸ் (Congress) ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, எந்தவித நெருக்கடியும் இன்றி சுமுகமாக ஆட்சியைக் கொண்டு செல்ல முடியும் என்று பனையூர் வியூக வகுப்பாளர்கள் ரகசியக் கணக்கு போட்டுள்ளனர்.
எதிர்கால அரசியல் போக்கு
இந்த புதிய அரசியல் சமன்பாடுகள், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியைக் கட்டுப்படுத்துவது, மறுபுறம் திமுகவின் ரகசிய வியூகங்களை முறியடிப்பது, அதே நேரத்தில் இடைத்தேர்தலில் முழு வெற்றியைக் கைப்பற்றுவது என விஜய்க்கு அடுத்தடுத்து பல சவால்கள் காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications
