Teacher's day: மாணவர்களுக்கு மனிதநேயத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய விஜய்!
சென்னை: மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!
ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கல்வி கற்றுக் கொடுப்பவர் மட்டும் ஆசிரியர் அல்ல, ஒழுக்கம், தொழில் உள்ளிட்டவைகளை கற்றுக் கொடுப்போரும் ஆசிரியரே!. ஏன் சமையல் சொல்லித் தருவோர், விளையாட்டு கோச் உள்ளிட்டோரும் ஆசிரியர்கள்தான், போற்றக் கூடியவர்கள்தான். எனவே இந்த நாளில் ஆசிரியர் ஸ்தானத்தில் இருப்போருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.


Click it and Unblock the Notifications
