மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டம்! மரகதம் குமரவேலிடம் சொன்னதை செய்த விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான புதிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில் தற்போது அந்த நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது "எங்கள் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா" என முதல்வர் விஜய்யிடம் மரகதம் குமரவேல் கோரிக்கை வைக்க அதற்கு விஜய்யும் நிச்சயம் என பதில் கொடுத்தார்.

CM Vijay

இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2,455 ஊரகக் குடியிருப்புகளில், 1,223 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தாராபுரம், காங்கேயம், மூலனூர், பொங்கலூர், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூரின் 7 ஊராட்சிகள், பல்லடத்தின் 17 ஊராட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்கு, காவிரி ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் 1,439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தாராபுரம் தொகுதி

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

தாராபுரம் வட்டம், சின்னப்பத்தூர் கிராமம், மஜரா குருப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வீட்டட்டி குடியிருந்துவரும் சுமார் 87 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில், பாசன கால்வாய்களில் உள்ள மண்திட்டுகளை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பாசன வாய்க்கால்

குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாசன வாய்க்கால்களில் உள்ள மண்திட்டுகள், புதர்கள் மற்றும் முட்செடிகள் அகற்றி சுமார் 271 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, சுமார் 13,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

தாராபுரம் வட்டம், மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.

குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி

தாராபுரம் நகராட்சியில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும், மேலும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மதுராந்தகம் திட்ட பணிகள்

அத்திமானம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ஒரு தடுப்பணை சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். செம்பூண்டி ஊராட்சியில் உள்ள பொதுப்பணித் துறை ஏரியின் மதகுகள் சுமார் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். நெல்வாய் ஊராட்சியிலுள்ள மடுவைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தும் பணி சுமார் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தின்னலூர் ஊராட்சியில் ஒரு புதிய சமுதாய நலக்கூடக் கட்டிடம் சுமார் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

நெல் கொள்முதல் நிலையம்

மதுராந்தகம் தொகுதியில் தலா 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள் சுமார் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையிலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லினைப் பாதுகாக்கும் வகையில் ஆத்தூரில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட SEMI COVERED கிடங்கு அமைக்கப்படும். மேலும், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் மாநில விதைப்பண்ணை அமைக்கப்படும்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

பாலாற்றின் குறுக்கே படாலம் மற்றும் உதயம்பாக்கம் இடையே ஒரு புதிய உயர்மட்ட தடுப்பணை கட்ட சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். 1984-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சுமார் 30 கி.மீ. நீளமுள்ள மதுராந்தகம் உயர்மட்டக் கால்வாயை 30 ஏரிகளுக்கு நீர் கிடைக்க செய்யும் வகையில் தூர்வாரி, அதன் கட்டமைப்புகள் படிப்படியாகச் சீரமைக்கப்படும்.

அவசர கால சிகிச்சை பிரிவு

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான ஒரு புதிய தங்கும் விடுதி அமைக்கப்படும். மேலும், படித்த இளைஞர்களுக்காக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்படும்.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாரம் சந்தை அமைக்கப்படும். புதிய மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்.

கருங்குழியில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மினி விளையாட்டு மைதானம் சுமார் 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்துத் தரப்படும்.

மின்மாற்றி

மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 MVA திறன்கொண்ட மின்மாற்றி நிறுவப்படும்.

மதுராந்தகம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான வாழ்விடத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எடுத்துச்செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் எளிதாகப் பயணம் செய்யும் வகையிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகளை விரைவாக நிறைவேற்றிட சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+