சென்னையில் ஷாக்.. கொலம்பஸ் ராட்டினத்தின் உதிரிபாகம் உடைந்து மாணவி தலையில் விழுந்தது! பரவும் வீடியோ
சென்னை: சென்னையில் பொழுதுபோக்கு பூங்காவில் கொலம்பஸ் ராட்டினத்தில் ஆடியபோது அதன் மையத்தில் இருந்த உதிரி பாகம் திடீரென்று உடைந்து கல்லூரி மாணவியின் மீது விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் வார இறுதி நாட்களில் மக்களின் கூட்டம் என்பது அலைமோதும்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசித்து வரும் மக்கள் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக இந்த பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது பொழுதுபோக்கு பூங்காவில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கொலம்பஸ் ராட்டினம். இந்த கொலம்பஸ் ராட்டினத்தில் சிலர் அமர்ந்து பயணித்தபோது திடீரென்று அதன் மையப்பகுதியில் இருந்த உதிரி பாகம் உடைந்து கல்லூரி மாணவியின் மீது விழுந்துள்ளது.
இந்த வீடியோ தற்போது பரவி வரும் சூழலில் அதுபற்றி விசாரித்தபோது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த சம்பவம் கடந்த 13ம் தேதி நடந்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றனர். அவர்கள் அனைவரும் கொலம்பஸ் ராட்டினத்தில் ஏறி அமர்ந்தனர். கொலம்பஸ் ராட்டினம் முன்னும், பின்னுமாக ஆடியது.
அப்போது கொலம்பஸ் ராட்டினத்தின் மையப்பகுதியில் இருந்த உதிரி பாகம் திடீரென்று உடைந்து மாணவியின் தலையின் மீது விழுந்துள்ளது. இதில் மாணவி காயமடைந்த நிலையில் கொலம்பஸ் ராட்டினம் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆம்புலன்ஸில் மாணவி ஏற்றப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்ட மாணவி அன்று மாலையே வீடு திரும்பி உள்ளார்.
முன்னதாக இந்த கொலம்பஸ் ராட்டினத்தில் மாணவிகள் ஆடியபோது அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் உதிரி பாகம் உடைந்து மாணவி மீது விழும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ தான் இப்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications