தமிழகத்தை உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடுவது பிழை.. அமெரிக்கா, கனடாவை பாருங்க.. ப சிதம்பரம் ஆவேசம்
சென்னை: மொத்தக் கடனை வைத்து மாநிலத்தின் பொருளாதாரத்தை மதிப்பிடுவது தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் என எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டுதோறும் கூடுகிறது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் இவ்வாறு ட்வீட் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

வளர்ந்த நாடுகளின் கடன்களும்
அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் என எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டுதோறும் கூடுகிறது என்றும் அவர் விளக்கியுள்ளார். இது தொடர்பாக ப சிதம்பரம் கூறியிருப்பதாவது:-
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது. அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது.
உ.பி பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது
இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு. மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு (சதவீதம்) என்பதே பொருத்தமான அளவை. தமிழ்நாட்டில் இந்த அளவை 2021-22 முதல் 2025-26 வரை ஸ்திரமாக (ஒரே நிலையில்) இருந்து வருகிறது.
நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் (Niti Aayog) விதித்த வரம்பான 3% என்ற நிலையைத் தமிழ்நாடு எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது. நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை. இவ்வாறு அவர் கூறினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தற்போதைய நிலவரம் படி 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக பாமக, தேமுதிக, டிடிவியின் அமமுக, ஓபிஎஸ் அணி ஆகியன யாருடன் கூட்டணி வைக்கும் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
இது ஒருபக்கம் இருக்க புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தன் பக்கம் இழுக்க ரகசியமாக முயற்சித்து வருவதாக அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் நிர்வாகிகளும் தவெகவினருடன் அவ்வப்போது பேசி வருவதாகவும் முனுமுனுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் வரும் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைக்குமா என பேசப்பட்ட நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறி வந்தார்.
ப சிதம்பரம் கருத்து
இத்தகைய சூழலில் காங்கிரஸ் நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்ததும், உத்தரபிரதேசத்தின் கடன் அளவைவிட தமிழ்நாட்டின் கடன் அளவு அதிகம் என்றும் பேசியிருந்தது தமிழக அரசியலில் விவாதப்பொருளானது. இது தொடர்பாக பேசிய செல்வப்பெருந்தகை தமிழ்நாட்டை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிட்டு பேசி, பாஜகவின், ஆர்.எஸ்.எஸின் பேசுபொருளாக அவர் மாறிவிட்டார் என்றும் அவர் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்பி ப சிதம்பரம் இந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications