இன்னும் முடியலை.. ட்விட்டரில் காயத்ரி ரகுராம், நாராயணன் திருப்பதி கருத்து மோதல்.. பாஜகவில் பரபரப்பு
சென்னை: பாஜகவில் இருந்து விலகியுள்ள காயத்ரி ரகுராம் தொடர்நது அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தான் பாஜக விவகாரம் தொடர்பாக காயத்ரி ரகுராம், மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி இடையே ட்விட்டரில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் பதிலளித்து வரும் நிலையில் இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை, நடன இயக்குனராக இருந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் செயல்பட்டு வந்தார். பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக அவர் இருந்தார்.
இந்நிலையில் காயத்ரி ரகுராமுக்கும், அக்கட்சியில் இருக்கும் சிலருக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. அவர்கள் மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாளராக கூறப்படுகிறது.

பாஜகவில் விலகிய காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராமும் அவர்களை தாக்கி ட்விட்டரில் பதிவுகள் செய்து வந்தார். இந்நிலையில் தான் காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் தான் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கூறினார்.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு
இந்நிலையில் காயத்ரி ரகுராம் பத்திரிகையாளர்களை சந்தித்து அண்ணாமலையை விமர்சனம் செய்தார். எனது பதவி நீக்கம் தொடர்பாக, விசாரணை நடத்த கட்சித் தலைமையிடம் கோரியிருந்தேன். அதேபோல், எனது தரப்பு விளக்கங்களை மின்னஞ்சலாகவும் அனுப்பியிருந்தேன். அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக வார் ரூமில் என்னைக் குறிவைத்து தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது. இருப்பினும் எந்த வித விசாரணையும் இன்றி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்ட்டுள்ளேன் என கூறியதோடு, தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நாராயணன் திருப்பதி கருத்து
தற்போதும் கூட அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்களை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார். இதற்கிடையே தான் காயத்ரி ரகுராம் விவகாரத்தில் பாஜகவின் துணை தலைவர் நாரயணன் திருப்பதி ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் பாஜகவில் லட்சுமண் ரேகாவை மீறுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. பாஜகவில் ஒழுக்கம் மிகவும் முக்கியம். ஒழுக்கமின்மையை பொறுத்து கொள்ள முடியாது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்து இருந்தார்.

காயத்ரி ரகுராம் கேள்வி
இந்நிலையில் தான் இந்த வீடியோவை பதிவிட்ட காயத்ரி ரகுராம், ‛‛சார் என் ஒழுக்கத்தை பற்றி பேசாமல் முதலில் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? விசாரணை அல்லது காரணம் இன்றி ஒருவரை சஸ்பெண்ட் செய்வது ஒழுக்கமா? நான் முதலில் டெல்லி அல்லது காவல் துறையில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டுமா? ஆதாரத்தை சமர்பித்தால் அண்ணாமலை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும்?'' என நாராயண் திருப்பதியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

நாரயணன் திருப்பதி பதில்
இதற்கு நாராயணன் திருப்பதி, ‛‛நான் உங்களின் ஒழுக்கத்தை பற்றி பேசவே இல்லை. நீங்கள் கட்சியின் ஒழுக்கத்தை மீறிவிட்டீர்கள் என்றுதான் கூறினேன். உங்களின் சொந்த விருப்பத்தில் கட்சிக்கு எதிராக நீங்கள் ட்விட் செய்திருந்தால் விசாரணை என்பது தேவையில்லை. எனவே காரணம் சொல்ல வேண்டிய அசவயம் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் எந்த ஆதாரத்தையும் வழங்க உங்களக்கு உரிமை உள்ளது'' என கூறியுள்ளார்.

அண்ணாமலை ரேகையை மீறவில்லையா?
இதற்கு காயத்ரி ரகுராம், ‛‛நான் இடைநீக்கம் செய்வதற்கு முன்பு கட்சியின் ஒழுக்கத்தை எந்த ட்விட் மூலம் மீறினேன் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு உரிமை இல்லையா? 150 பேர் முன்னிலையில் என்னை பற்றி பேசிய அண்ணாமலை லட்சுமண் ரேகாவை மீறவில்லையா? பொய்களை கூறும் அண்ணாமலை லட்சுமணரேகாவை மீறவில்லையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications