ஃப்ளைட் டிக்கெட்ட விட சென்னை ஆட்டோ சார்ஜ் அதிகம்? ஒரு கி.மீக்கு இத்தனை ரூபாயா? பகீர் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை என்றாலே மெரினா கடற்கரை, ஃபில்டர் காபி, தியாகராய நகர் ஷாப்பிங் எனப் பல பெருமைகள் உண்டு. ஆனால் அதே அளவுக்கு ஊரறிந்த மற்றொரு விஷயம், சென்னை ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண வசூல். ஒவ்வொரு வருடமும் கோலிவுட் பட வசூல்.. டாஸ்மாக் வசூல்.. இரண்டையும் சேர்த்தால் அதைவிட ஆட்டோ டிரைவர்களின் வசூல் அதிகம்!

சென்னையில் ரயிலில் இருந்து இறங்கி வெளியே வரும் ஒரு வெளியூர் பயணியாக இருந்தாலும் சரி, பல ஆண்டுகளாக இந்த ஊரிலேயே குடியிருக்கும் உள்ளூர்வாசியாக இருந்தாலும் சரி, ஆட்டோ டிரைவரிடம் பேரம் பேசி சலித்துப்போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. "அங்கெல்லாம் போக மாட்டேன்", "வர வழியில ஆள் கிடைக்காது, ₹200 எக்ஸ்ட்ரா குடுங்க" என்ற பதிலை ஒருமுறையாவது கேட்காத சென்னைவாசியே இல்லை.

chennai traffic auto price

இப்போது இந்த ஆட்டோ கட்டண விவகாரத்தில் சமூக வலைதளங்களிலும் டீக்கடை பெஞ்சுகளிலும் ஒரு விசித்திரமான ஒப்பீட்டுக் கணக்கு வைரலாகி வருகிறது. அதாவது, சென்னையில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஆட்டோவுக்குக் கொடுக்கும் கட்டணமானது, ஆகாயத்தில் பறக்கும் விமானத்தின் ஒரு கிலோமீட்டர் கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகம் என்பதுதான் அது. இது ஏதோ கிண்டலுக்காக சொல்லப்படும் விஷயம் அல்ல.. அப்பட்டமான எளிய கணக்கு.

விமான கட்டணமும் சென்னை ஆட்டோவும்: அதென்ன பகீர் கணக்கு?

சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல பொதுவாக வழக்கமான ஒரு விமான டிக்கெட் கட்டணம் சராசரியாக ₹11,400 . சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே உள்ள வான்வழிப் பயண தூரம் சுமார் 1,761 கிலோமீட்டர்.

இப்போது இந்த விமான கட்டணத்தை கிலோமீட்டருக்குப் பிரித்துப் பார்த்தால், ஒரு கிலோமீட்டருக்கு நாம் கொடுக்கும் தொகை தோராயமாக வெறும் ₹6.50 மட்டுமே.

ஆனால், சென்னை ரோட்டில் என்ன நடக்கிறது? சென்னையில் ஒரு 16 கிலோமீட்டர் தூரம்.. உதாரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கியோ அல்லது கோயம்பேட்டிலிருந்து திருவான்மியூருக்கோ செல்ல வேண்டும் என்றால்.. ரோட்டில் நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் சாதாரணமாகக் கேட்கும் தொகை ₹500.

இந்த 16 கிலோமீட்டருக்கு ₹500 என கணக்கிட்டால், ஒரு கிலோமீட்டருக்கு நாம் தரும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? சரியாக ₹31.20!

வானத்தில் ஏசி வசதியுடன், இரண்டரை மணி நேரத்தில் 800 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் அதிநவீன விமானத்தில் பயணிக்க ஒரு கிலோமீட்டருக்கு ₹6.50 தான் செலவாகிறது. ஆனால், சென்னையில் திறந்தவெளியில், தூசியும் புகையும் வாங்கிக்கொண்டு, டிராபிக்கில் ஊர்ந்து செல்லும் ஆட்டோவில் செல்ல ஒரு கிலோமீட்டருக்கு ₹31.20 செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதாவது, விமான கட்டணத்தை விட ஆட்டோ கட்டணம் சுமார் ஐந்து மடங்கு அதிகம்!

2 கிலோமீட்டருக்கு ₹200 கேட்கும் பகல் கொள்ளை

இது வெறும் 16 கிலோமீட்டர் நீண்ட பயணத்துக்கு மட்டுமல்ல. குறுகிய தூரப் பயணங்களில்தான் இந்த அநீதி இன்னும் அதிகமாக நடக்கிறது.

வெறும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆட்டோவில் ஏறினால், சர்வ சாதாரணமாக ₹150 முதல் ₹200 வரை கேட்கிறார்கள். 4 அல்லது 5 கிலோமீட்டர் தூரம் என்று வந்துவிட்டால், சட்டென ₹350 முதல் ₹400 வரை வாய் கூசாமல் விலை பேசுகிறார்கள்.

சமீபத்தில் தமிழக அரசு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத் திருத்தத்தை அறிவித்தது. அதன்படி குறைந்தபட்சக் கட்டணமாக 1.8 கிலோமீட்டருக்கு ₹50 என்றும், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹25 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கள நிலவரம் என்னவோ அதே பழைய கதைதான். எந்த ஆட்டோவிலும் மீட்டர் ஓடுவதில்லை; அரசு நிர்ணயித்த கட்டணத்தை யாரும் ஏற்பதும் இல்லை. "அரசாங்கமே ஏத்திருச்சு, அப்ப நாங்க கேக்குறது நியாயம்தானே" என்று சொல்லி, மேலும் கூடுதலாகவே வாடகை கேட்கும் அவலமே பல இடங்களில் அரங்கேறுகிறது. ஆனால் மற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இந்த அவலம் இல்லை!

"மீட்டர்" என்பது அலங்காரப் பொருள் மட்டும்தானா?

மும்பை போன்ற பெருநகரங்களில் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும் டிரைவர் சட்டென மீட்டரை ஆன் செய்வார். அங்கு மீட்டர் போட மறுத்தால் மக்கள் வண்டியில் ஏற மாட்டார்கள்.. போலீஸாரும் கடும் அபராதம் விதிப்பார்கள். ஆனால் சென்னையில் மட்டும் மீட்டர் என்பது டாஷ்போர்டில் இருக்கும் ஒரு வெறும் அலங்காரப் பொருளாகவே மாறிவிட்டது.

ஓட்டுநர்களிடம் இதுபற்றி கேட்டால் சில வழக்கமான காரணங்களை அடுக்குகிறார்கள்.

திரும்பி வரும்போது அந்தப் பகுதியில் சவாரி கிடைக்காது, காலியாகத் திரும்ப வேண்டும். அதற்கான பணத்தையும் இப்போதே தர வேண்டும். பெட்ரோல், கேஸ் விலை எகிறிவிட்டது, வண்டி பழுது பார்க்கும் செலவு அதிகம். நாங்கள் நாள் முழுக்க வெயிலில் காத்திருந்து 4 அல்லது 5 சவாரிகள் மட்டுமே ஓட்டுகிறோம். அதனால் இதில் சம்பாதித்தால்தான் குடும்பம் ஓடும்.

ஆனால் இந்த நியாயங்கள் எதுவும் அப்பாவி பொதுமக்களின் சுமையைக் குறைக்கப் போவதில்லை. நாள் முழுக்க உழைத்துவிட்டு வீடு திரும்பும் சாதாரண நடுத்தரக் குடும்பத்து மக்களும், மருத்துவமனைக்கு அவசரமாகச் செல்பவர்களும்தான் இந்தத் திடீர் கட்டண உயர்வால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

ஆப் கட்டணத்தை விடவும் அதிகமா?

முன்பெல்லாம் ஓலா, உபர், ரேபிடோ போன்ற செயலிகள் வந்தபோது மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் இப்போது அங்கும் சிக்கல் தொடங்கிவிட்டது.

ரோட்டில் நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், பயணியின் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதைப் பார்த்தாலே சுதாரித்துக் கொள்கிறார்கள். "ஆப்பில் புக் பண்ணா வண்டி லேட்டா வரும், அல்லது கேன்சல் பண்ணிடுவாங்க. நான் இப்போதே கூட்டிட்டு போறேன், ₹50 சேர்த்து கொடுங்க" என்று பேரம் பேசுகிறார்கள். பல நேரங்களில் ஆப்பில் காட்டும் கட்டணத்தை விட ₹100 கூடுதலாகக் கேட்பதும் சாதாரணமாகிவிட்டது.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஒரு ஆட்டோ டிரைவர் ₹350 கேட்கும் அதே 5 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதே செயலியில் ஏசி கார் புக் செய்தால் ₹300-லிருந்து ₹330-க்குள் வந்துவிடுகிறது. "ஆட்டோவுக்குத் தரும் காசுக்கு சொகுசாக ஏசி காரிலேயே போயிடலாம்" என மக்கள் கார் பக்கம் தாவுவதற்கு இந்த எல்லைமீறிய கட்டண வசூலே முக்கியக் காரணம்.

இதற்குத் தீர்வே கிடையாதா?

சென்னையின் போக்குவரத்து அமைப்பில் ஆட்டோக்கள் மிக முக்கியமானவை. பஸ் அல்லது ரயில் நிலையத்திலிருந்து இறங்கி வீட்டின் வாசல் வரை செல்லும் கடைசி மைல் இணைப்புக்கு ஆட்டோக்கள் அத்தியாவசியம். ஆனால் இந்த அதீதக் கட்டண போக்கால், பொதுமக்கள் தற்போது மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் பைக் டாக்ஸிகளை நோக்கி வேகமாக மாறத் தொடங்கிவிட்டார்கள்.

அரசு வெறும் கட்டணத்தை ஜி.ஓ மூலம் மாற்றி அறிவித்தால் மட்டும் போதாது. ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர்கள் முறையாக இயங்குவதை போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து போலீஸார் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அரசு தரப்பிலேயே கேரளா போன்ற மாநிலங்களைப் போல ஒரு பொதுவான ஆட்டோ ஆப் அல்லது வெளிப்படையான கட்டண கண்காணிப்பு முறையை அமல்படுத்த வேண்டும். மக்கள் எளிதாகப் புகார் தெரிவிக்கும் ஹெல்ப்லைன் எண்களை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பெரிய அளவில் காட்சிப்படுத்த வேண்டும்.

விமானத்தில் பறப்பதை விட ஆட்டோவில் பயணிப்பதுதான் சாமானியனுக்குச் செலவு அதிகம் என்ற இந்த அவலத்திற்கு அரசு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+