தமிழக பொதுத் துறை கணினியில் சைபர் அட்டாக், முக்கிய ஆவணங்கள் முடக்கம்: கிரிப்டோகரன்சி கேட்டு மிரட்டல்
சென்னை: தமிழக அரசுத் துறையின் சில முக்கிய ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைபர் அட்டாக்கால், மறைகுறியாக்கப்பட்ட (encrypted) சில கோப்புகள், விஐபி வருகைகள், அது சார்ந்த திட்டங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

என்க்ரிப்டட் குறியீட்டை ஒப்படைப்பதற்காக 1,950 மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கிரிப்டோகரன்சி வழியில் செலுத்த வேண்டும் ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனிடையே, கணினி மேம்பாட்டு மையம் (சி-டிஏசி) மற்றும் கணினி பிரச்சினைகளை விரைந்து சரி செய்ய அமைக்கப்பட்ட மத்திய மாநில அரசுகளின் குழுக்கள், இணைய பாதுகாப்பு நிபுணர்கள், இந்த என்க்ரிப்ட்டை மீட்டெடுக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
பொதுத் துறையில் குறிப்பிட்ட அந்த பிரிவில் பயன்படுத்தப்படும் 12 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், சுமார் 8 கம்ப்யூட்டர்கள் விண்டோஸ் -7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாக தெரியவந்துள்ளது. இது மைக்ரோசாப்டிலிருந்து சிறிய அளவுக்கு சப்போர்ட் மட்டுமே கிடைக்க கூடிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இதன் காரணமாக, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு பாதுகாப்பு/மென்பொருள் அப்டேட்கள் அல்லது பிற சைபர் தாக்குதல்களைத் தடுக்க வைரஸ் தடுப்பு வழிமுறை இல்லை.
மற்ற வழிகளில் இருந்து கோப்புகளின் உள்ளடக்கத்தை அதிகாரிகள் மீட்டெடுக்க முயற்சிகள் நடக்கின்றன. டெஸ்க்டாப் கணினிகளை ஆய்வு செய்த தமிழக காவல்துறையின் சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் விஐபி பாதுகாப்பு புரோட்டோக்கால் அல்லது வழக்கமான செயல்பாடுகளை பாதிக்கும் வேறு எந்த விஷயத்திலும் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.
"இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள எங்களுக்கு ஒரு பயனுள்ள தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு கொள்கை மற்றும் கணினி தடயவியல் நிபுணர்கள் தேவை. மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பாதுகாப்பு இல்லாத காலாவதியான ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு அச்சுறுத்தலாக உள்ளது. வாட்ஸ்அப் செய்தி மூலம் வைரஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம் (டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் திறக்கப்பட்டுள்ளது), மின்னஞ்சல், பாப்-அப் போன்றவற்றின் மூலமும் வைரஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்" என்று விசாரணைக் குழுவில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சைபர் நிபுணர்களின் ஆய்வுப்படி, சமீப காலமாக ரான்சம்வேர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தெரியாத இடங்களிலிருந்து செயல்படும் ஹேக்கர்கள், முக்கிய நபர்களை குறிவைத்து, முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது அவர்கள் பார்வையிட்ட வலைத்தளங்களை தங்கள் வசம் வைத்திருப்பதாக கூறி, பணம் கேட்டு மிரட்டுவது அதிகரித்துள்ளது.
பொதுத் துறையில் நடந்துள்ள இந்த சைபர் அட்டாக் குறித்து, விரைவில் காவல்துறையில் முறையான புகார் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications