புயல்..மழை..மக்களுக்கு உதவ தயாராக இருங்கள்..காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
சென்னை: புயல் மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயாராக இருக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர், மாவட்ட எஸ்.பி.க்கள் தயாராக இருக்கும் படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை பெய்வது கடந்த 10 நாட்களாக குறைந்திருந்தது. ஆனால், தென் மாவட்டங்களில் மட்டும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வந்தது. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரையில் புயல் ஏதும் உருவாகி தமிழகத்தில் பெரிய அளவில் பெய்யவில்லை.

இந்நிலையில் தான், தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வங்கக் கடலுக்குள் நுழைந்த காற்று, அந்தமான் அருகே காற்றழுத்தமாக உருவானது. அது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அதே நேரத்தில் வடஇலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஒன்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து அந்தமான் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இணைந்துள்ளது.
இந்த இரு காற்றழுத்தங்களின் இணைப்பு மேலும் வலுப்பெற்று நேற்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையில் புயலாக மாறும் என்றும், நாளை காலை வடதமிழகம் - புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலை அடையும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 770 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புதிய புயலுக்கு மாண்டஸ் எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இன்று மாலை புயல் சின்னமாக வலுவடைந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக சென்னையில் 9 மற்றும் 10ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று பாலச்சந்திரன் கூறினார்.
இந்த புயல் எச்சரிக்கை காரணமாக தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, புயல் மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயார் நிலையில் இருக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர், மாவட்ட எஸ்.பி.க்கள் தயாராக இருக்கும் படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார். சென்னையில் மீட்பு பணிகளால் ஈடுபட நீச்சல் வீரர்கள் 50 பேர் கொண்ட அணி தயாராக உள்ளத்தாக டிஜிபி தெரிவித்துள்ளார்.