ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்வதில் சிக்கல்? எய்ம்ஸ் குழு அனுப்பிய கடிதம்.. மீண்டும் அவகாசமா?
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பது மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அரசிடம் கால அவகாசம் கேட்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இதுவரை 13 முறை தமிழக அரசு கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தங்களது இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதாக எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரண விசாரணை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்பல்லோ நிர்வாகம், மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வந்தது.

ஆறுமுகசாமி ஆணையம்
குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது. அதன்பின்னர் அடுத்தடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வருவது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை தீவிரம்
அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. மருத்துவக் குழு அமைத்து விசாரணையை நடத்தவும் எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. அதையடுத்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.

அறிக்கை தயாரிப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. 2017 ஆம் ஆண்டு பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இதுவரை மொத்தம் 156 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக நடந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

13வது முறையாக
ஜூன் 24ஆம் தேதியோடு ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 1 மாதம் 7 நாட்கள் அவகாசத்தை நீட்டிக்கக்கோடி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது ஆறுமுகசாமி ஆணையம். ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கான கால அவகாசம் கடந்த ஜூன் மாதம் 13வது முறையாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி, கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

எய்ம்ஸ் கடிதம்
இந்நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. விசாரணையில் இடம்பெற்று இருக்கும் மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு தான் அவர்கள் இந்தியா திரும்புகிறார்கள். அதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவகாசம்?
இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மேலும் தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எய்ம்ஸ் அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரம் தான் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதால், அதற்குப் பிறகே ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய முடியும். இதனால், மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications