தனுஷ் அதிமுக.. சிவகார்த்திகேயன் திமுக.. விஜய்க்கு ஓட்டு போட்டு நொந்துபோன மக்கள்? வெடிக்கும் பிரபலம்
சென்னை: சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது தமிழக அரசியலில் எப்போதுமே கவனம் பெறும் விஷயமாக இருக்கிறது. அந்த வகையில், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வந்தால் எந்தக் கட்சியுடன் இணைவார்கள், யாருக்கு நெருக்கடி ஏற்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்க்கு கிடைத்த ஆதரவு இனி வரும் நடிகர்களுக்கும் கிடைக்குமா என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான கோடீஸ்வரன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "தனுஷ் புதிதாக அரசியலுக்கு வந்தால், விஜய்க்கு இவ்வளவு ஆதரவு கொடுத்ததைப் போல அவருக்கும் ஆதரவு கொடுக்கலாமா என்று மக்கள் யோசிப்பார்கள். தனுஷ் மட்டுமல்ல, அஜித், சிம்பு, சூர்யா என எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும், நிர்வாக அனுபவம் இல்லாத ஒரு நடிகருக்கு வாக்களித்த அனுபவத்தால் மக்கள் இப்போது எச்சரிக்கையாக இருப்பார்கள்.

தனுஷ், சிவகார்த்திகேயன்
எனவே, நடிகர் தனுஷ் யாருடன் இயல்பாக இணைந்து செயல்படுவார் என்பதை பார்க்க வேண்டும். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை, அவருடைய படங்கள், நடை, உடை ஆகியவற்றைப் பார்க்கும்போது திமுகவின் சிந்தனைகளுடன் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தனுஷை பொறுத்தவரை, அவர் கோயிலுக்கு செல்வது, ஓம் நமசிவாய என்று வழிபடுவது போன்றவற்றை பார்க்கும்போது, பாஜக அல்லது அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது அவருக்குப் பொருத்தமாக இருக்கலாம். அவர்களுடைய குணாதிசயங்களை வைத்துத்தான் இதைச் சொல்கிறேன். அவர்கள் அரசியலுக்கு வருவார்களா, வரமாட்டார்களா என்பது வேறு விஷயம்.
தனுஷ் அதிமுகவுக்கு வந்தால்?
தனுஷ் அதிமுகவுக்கு வந்தால், அது அந்த கட்சிக்குள் தலைமை தொடர்பான கேள்விகளை எழுப்பும். இவ்வளவு காலம் கட்சியில் உழைத்தவர்கள், அடுத்தகட்ட தலைமை யார் என்ற கேள்வியை எழுப்பலாம். அதேபோல், தனுஷுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவானால் முதலில் விஜய்க்குத்தான் நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே விஜய்க்கு ஆதரவாக இருக்கும் வாக்குகள் மற்றொரு நடிகரின் வருகையால் பிரிய வாய்ப்புள்ளது.
தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் உருவானால் முதலில் விஜய்க்குத்தான் நெருக்கடி ஏற்படும். இப்போது விஜய்யிடம் இருக்கும் வாக்குகளைத்தான் இவர்கள் முதலில் பெறுவார்கள். ஒரு புதிய கட்சி வரும்போது, பெரிய கட்சியிலிருந்துதான் ஒரு பகுதி வாக்குகள் பிரியும். அதுமட்டுமல்லாமல், ஆளுங்கட்சியை எதிர்த்து யார் கேள்வி கேட்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தனுஷ் அதிமுகவுக்கு வந்தால், எடப்பாடி பழனிசாமிக்குப் பிறகு கட்சியின் தலைமை யார் என்ற கேள்வி அதிமுகவுக்குள் எழலாம். இவ்வளவு காலம் கட்சியில் உழைத்தவர்கள், தனுஷ் வந்த பிறகு தங்களுடைய இடம் என்னவாகும் என்று யோசிப்பார்கள்.
சிவகார்த்திகேயன் திமுகவில் சேர்ந்தால்?
அதேபோல், சிவகார்த்திகேயன் திமுகவில் சேர்ந்தால், உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் இடம் இருக்குமா என்ற கேள்வியும் எழலாம். சிவகார்த்திகேயனுக்கும் பெரிய கூட்டம் கூடினால், அந்த ரசிகர் கூட்டத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்ற பார்வை உருவாகும்.
ஆனால், விஜய்க்குக் கிடைத்த செல்வாக்கும் வாக்குகளும் இனி எந்த நடிகருக்கும் கிடைக்காது. ஏனென்றால், அரசியல் அனுபவமே இல்லாத ஒரு நடிகரை நம்பி வாக்களித்தோம் என்று மக்கள் இப்போது விஜய்யின் ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து பேசத் தொடங்கி விட்டார்கள்..
200 யூனிட் இலவச மின்சாரம்
200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாகச் சொல்லிவிட்டு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; பெண்கள் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுகின்றன. தவெக நிர்வாகிகள் மீது பெண் நிர்வாகிகள் புகார் அளித்திருக்கிறார்கள்.
இப்போது அனுபவம் இல்லாத ஒரு நடிகரை நம்பி வாக்களித்த மக்கள், இப்போது ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நடிகர் வந்தாலும், மக்கள் ஏற்கெனவே பட்ட அனுபவத்தை வைத்துத்தான் முடிவெடுப்பார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
